கமல் நடிப்பில் நான்கு வருடங்களுக்கு பிறகு வெளியாகியுள்ள இந்த படம் அவரது ரசிகர்களின் பசிக்கேற்ற தீனி போட்டிருக்கிறதா ? பார்க்கலாம்
1987 இல் வெளியான விக்ரம் படத்திலிருந்து ஒரு சிறு பொறியையும் கைதி படத்திலிருந்து ஒரு சிறிய விஷயத்தையும் எடுத்துக்கொண்டு அதை ஒன்றிணைத்து புதிய திரைக்கதை அமைத்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
பல கோடி மதிப்புள்ள போதைப்பொருள் அடங்கிய இரண்டு கன்டெய்னர்களை மறைத்து வைக்கிறார் போலீஸ் அதிகாரியான காளிதாஸ் ஜெயராம். அதனை தொடர்ந்து அவரும் இன்னொரு போலீஸ் அதிகாரியான ஹரீஸ் பெராடியும் காளிதாஸின் வளர்ப்புத் தந்தையான கமல் என அடுத்தடுத்து மூவர் கொல்லப்படுகின்றனர். அந்த போதைப்பொருளை கைப்பற்றும் முயற்சியில் தாதா விஜய் சேதுபதி களமிறங்க, இந்த மூன்று கொலைகளில் பின்னணி என்ன என்பதை கண்டுபிடிப்பதற்காக சீக்ரெட் ஏஜென்ட் ஆன பஹத் பாசில் நியமிக்கப்படுகிறார்.
இந்த நிலையில் அந்த போதை பொருள் தொடர்பாக இரண்டு நபர்களை முகமூடி கூட்டமொன்று அடுத்தடுத்து கொல்கிறது. அந்த முகமூடி கூட்டத்தின் தலைவர் யார் என்று பார்த்தால் அதுவும் கமல் தான். அப்படியென்றால் ஆரம்பத்திலேயே அவர் கொல்லப்பட்டது, அதன்பிறகு இப்போது அவர் போதைப்பொருள் கண்டெய்னர்களை தேடுபவர்களை குறிவைத்து கொல்வது எல்லாம் எதற்காக ? இந்த நாடகத்தின் பின்னணி என்ன ? பஹத் பாசிலுக்கு இந்த உண்மை தெரியவந்ததும் அவர் எடுக்கும் முடிவு என்ன? இதன்பிறகு விஜய்சேதுபதியின் ஆட்டம் எப்படி இருந்தது ?முடிவில் யாருக்கு ஜெயம் ? என விறுவிறு திரைக்கதையுடன் மீதி படத்தை நகர்த்தியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒன்றை மட்டும் முடிவு செய்துவிட்டு களத்தில் இறங்கியிருக்கிறார். அதாவது படம் எவ்வளவு நீளமாக இருந்தாலும் போரடிக்காமல் விறுவிறுப்பாக கொண்டு செல்ல வேண்டும் என்பதை மனதில் ஏற்றி கொண்டதாலோ என்னவோ மூன்று மணி நேரமும் கொஞ்சம் கூட போரடிக்காமல் செம ஸ்பீடில் செல்கிறது. நாயகன் என்று பார்த்தால் கமல் பஹத் பாசில் இருவருக்குமே சம முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
கூடவே விஜய்சேதுபதியும் இவர்களுக்கு சமமாக கெத்து காட்டியுள்ளார். படத்தின் முதல் பாதி முழுவதும் பஹத் பாசில் தன் கையில் எடுத்துக்கொண்டு அதகளம் பண்ணியிருக்கிறார்.
முதல் பாதியில் பிளாஷ்பேக்கில் ஆங்காங்கே சாதாரண ஒரு மனிதனாக வந்து செல்லும் கமல், இடைவேளைக்கு சற்று முன்னதாக விஸ்வரூபமெடுக்கும் காட்சி வறண்ட பாலைவனத்தில் பெய்த மாமழை போல கமல் ரசிகர்களின் நெஞ்சத்தை ரொம்பவே குளிர்வித்து இருக்கும்.
தன் தோற்றத்தில் எந்த மாற்றத்தையும் பெரிதாக செய்துகொள்ளாமல் இப்போது இருக்கும் அதே தோற்றத்தில் அதே சமயம் வாலிப மிடுக்குடன் கமல் ஆக்ஷன் காட்சிகளில் தூள் பற்த்தி இருக்கிறார்.
விஜய்சேதுபதி மாஸ்டர் பட பவானியின் இன்னொரு வெர்ஷனாக மிரட்டி இருக்கிறார் குறிப்பாக சண்டைக்காட்சிகளில் அடி வாங்கிவிட்டு பின்னர் ஒரு போதை வஸ்துவை வாயில் கடித்துக்கொண்டு மீண்டும் எனர்ஜியுடன் சண்டையிடுவது கைதட்டலை அள்ளுகிறது.
இவர்கள் தவிர நரேன், காளிதாஸ் ஜெயராம், போலீஸ் துறையில் வரும் கருப்பு ஆடாக மலையாள நடிகர் செம்பான் வினோத் ஜோஸ் ஆகியோர் முக்கியத்துவம் பெறுகின்றனர். படத்தில் கதாநாயகிகளுக்கு என எந்த ஒரு முக்கியத்துவமும் இல்லை. இருந்தாலும் பஹத் பாசலுக்கு ஜோடியாக் நடித்துள்ள காயத்ரிக்கு இவ்வளவு பெரிய படத்தில் ஹீரோயின் வாய்ப்பு கிடைத்துள்ளது அதிசயம் தான். அதை சரியாக பயன்படுத்தி உள்ளார். பெயரளவுக்கு விஜய்சேதுபதிக்கு ஜோடியாக சின்னத்திரை நடிகைகள் மூன்று பேர் தங்கள் முகத்தை காட்டி விட்டு செல்கின்றனர்.
கிரிஷ் கங்காதரனின் ஒளிப்பதிவில் அதிக்கப்படியான இரவு நேர காட்சிகள் அவருடைய குழுவின் மெனக்கெடலையும் அர்பணிப்பு உழைப்பையும் பறைசாற்றுகிறது. அதேபோல தான் அனிருத்தும் பின்னணி இசையில் விதவிதமான மாயாஜாலம் காட்டியிருக்கிறார்.
இந்த படத்திற்கு கமலின் பழைய விக்ரம், தான் இயக்கிய கைதி, அதுமட்டுமில்லாமல் இவற்றிற்கெல்லாம் இணைப்பாக கிளைமாக்ஸில் சூர்யாவின் மாஸ் என்ட்ரி என படத்தில் பல ஆச்சரியங்களுக்கும் நிறைய இடம் கொடுத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
மொத்தத்தில் கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, ஆக்சன் ரசிகர்களுக்கும் செமத்தியான விருந்துதான் இந்த விக்ரம்.