நீண்ட நாட்களாக ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட கமல் நடித்த விக்ரம் திரைப்படம் நேற்று வெளியானது. இதற்கு முன்னதாக கார்த்தி, விஜய் ஆகியோரை வைத்து கைதி, மாஸ்டர் என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்கி இருந்தது ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
அதேபோல விஜய்சேதுபதி வில்லனாகவும் மலையாள நடிகர் பஹத் பாசில் முக்கிய வேடத்திலும் நடித்து இருந்தது கூடுதல் எதிர்பார்ப்பை கிளப்பியது. இந்தநிலையில் படம் வெளியாகி தற்போது வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. வெளிவரும் விமர்சனங்கள் அனைத்தும் பாசிட்டிவ் ஆகவே இருக்கின்றன.
இந்த படத்தை தமிழகம் முழுவதும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தான் வெளியிட்டிருந்தது. இந்த படத்தின் வெற்றி காலையிலேயே தெரிந்துவிட்டதால், உற்சாகமான உதயநிதி கமலை நேரில் சந்தித்து விக்ரம் படத்தின் வெற்றிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
நான்கு வருடங்களுக்கு முன்பு வெளியான கமலின் விஸ்வரூபம்-2 திரைப்படம் பெரிதாக வெற்றி பெறாத நிலையில், கமல் அரசியலில் நுழைந்து அதிலும் வெற்றியை ருசிக்காத நிலையில், தற்போது அவருக்கு ஒரு கம்பேக் படமாக விக்ரம் படத்தின் வெற்றி அமைந்துள்ளது என்று சொல்லலாம்.