நேரம், ராஜா ராணி, நய்யாண்டி உள்ளிட்ட ஒருசில தமிழ் படங்களில் மட்டுமே நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் நஸ்ரியா. திருமணத்திற்கு பிறகு ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு தமிழில் அடடே சுந்தரா என்கிற படத்தின் மூலம் ரசிகர்களுக்கு தரிசனம் தர இருக்கிறார்.

தெலுங்கில் அண்டே சுந்தரானிக்கி என்கிற பெயரில் உருவாகியுள்ள படம்தான் தமிழில் அடடே சுந்தரா என்கிற பெயரில் வரும் ஜூன் 10ஆம் தேதி வெளியாகிறது..

இந்தப்படத்தில் கதாநாயகனாக நானி நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் நதியா, ரோகிணி, இயக்குனர் அழகம்பெருமாள் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தை விவேக் ஆத்ரேயா என்பவர் இயக்கியுள்ளார்

இதில் ஆச்சரியம் என்னவென்றால் ரோகினியும் நானியும் ஏற்கனவே சில படங்களில் தாயும் மகனுமாக நடித்திருப்பவர்கள் தான். இருந்தாலும் இந்த படத்தில் ரோகிணியின் கதாபாத்திரம் தனித்தன்மை உடையது என அவரே சமீபத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

இயக்குனர் அழகம் பெருமாளுக்கு தெலுங்கில் இது முதல் படம் என்பதால் அவருக்கு இந்த படம் ரொம்பவே ஸ்பெஷல். அதுமட்டுமல்ல கல்லூரி காலத்தில் நதியாவின் படங்களைப் பார்த்து அவரது அழகிலும் நடிப்பிலும் கிறங்கிப்போயிருந்த அழகம்பெருமாள், தற்போது நதியாவுக்கு ஜோடியாக இந்த படத்தில் நடித்து இருப்பதன் மூலம் மிகப்பெரிய அற்புதம் நடந்து இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்..