ஒரு பக்கம் சினிமாவில் பிரபலமாகும் கதாநாயகிகள், முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக தொடர்ந்து நடிப்பதையே லட்சியமாக கொண்டு அந்தப்பாதையில் வேகநடை போடுவார்கள். ஆனால் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இதற்கு அப்படியே நேரெதிராக பிஸியான கதாநாயகியாக இருந்தாலும், கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

குறிப்பாக முன்னணியில் இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது வெப்சீரிஸின் பக்கமும் தனது கவனத்தை திருப்பி அதிலும் ஒரு கை பார்க்க களமிறங்கியுள்ளார். அந்த வகையில் அவர் நடித்துள்ள வெப்சீரிஸ் தான் சுழல்.

விக்ரம் வேதா என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர்கள் புஷ்கர் காயத்ரி ஆகியோரின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த சுழல் வெப்சீரிஸை பிரம்மா மற்றும் அனுசரண் இருவரும் இணைந்து இயக்கியுள்ளனர்.

இந்த வெப்சீரிஸ் எட்டு எபிசோடுகளாக உருவாகி உள்ளது. வரும் 17ஆம் தேதி முதல் ஓடிடி தளத்தில் இது வெளியாகிறது. காணாமல் போன ஒரு பெண் குழந்தையைப் பற்றிய தேடலாக இந்த வெப்சீரிஸ் உருவாகி உள்ளது.

இதில் என்ன ஹைலைட் என்றால் இந்த வெப்சீரிஸ் ஹிந்தி மற்றும் தென்னிந்திய மொழிகள் நான்கிலும் மட்டுமல்லாமல் ஜப்பானிய, போர்த்துக்கீசிய, அரபு உள்ளிட்ட கிட்டதட்ட 10 வெளிநாட்டு மொழிகளிலும் வெளியாகிறது.

இதுபற்றி இந்த வெப்சீரிஸ் தயாரிப்பாளர்களான இயக்குனர்கள் புஷ்கர் காயத்ரி கூறும்போது, “பொழுதுபோக்கு என்பது மொழிக்கு அப்பாற்பட்டது.. இன்று உலகம் முழுவதிலும் இருந்து நல்ல கதைகளை கேட்க ரசிகர்கள் தயாராக இருக்கிறார்கள்.. நம்நாட்டில் இருந்து முக்கியமான அம்சங்களை மற்றவர்களுக்கு எடுத்துச் செல்லும் ஒரு நல்ல தொடக்கமாக இது அமைந்துள்ளது” என்று கூறுகிறார்கள் .