தென்னிந்திய நடிகர் சங்கத்தை பொருத்தவரை தலையாய பிரச்சினையாகவும் நீண்டநாள் தீர்க்கப்படாத பிரச்சினையாகவும் இருந்து வருவது நடிகர் சங்க கட்டிட விவகாரம் தான். கடந்த சில வருடங்களுக்கு முன்பு ராதாரவி சரத்குமார் ஆகியோர் பொறுப்பில் இருந்தபோது, நடிகர் சங்க கட்டடம் கட்டும் பணிகளை முன்னெடுத்தாலும் அதை ஒரு தனியார் நிறுவனத்திற்கு லாபம் கிடைக்கும் விதமாக ஒப்பந்தம் செய்திருந்தனர்.
இதை எதிர்த்து விஷால், நாசர், கார்த்தி கூட்டணியான பாண்டவர் அணி போட்டியிட்டு வெற்றி பெற்றது. அதேபோல பொறுப்புக்கு வந்ததும் நடிகர் சங்க கட்டடத்தை கடும் முயற்சியும் தொடங்கியது. ஆனால் சில பல காரணங்களால் கட்டிடம் கட்டும் பணி பாதியிலேயே நிற்கிறது. குறிப்பாக நிதிப்பற்றாக்குறை இதில் முக்கியமாக கூறப்படுகிறது
இந்தநிலையில் மீண்டும் பொறுப்புக்கு வந்துள்ள பாண்டவர் அணி விரைவில் இந்த கட்டடத்தை கட்டி முடிக்க வேண்டுமென முனைப்புடன் களமிறங்கியுள்ளது. இதற்காக கலைநிகழ்ச்சி நடத்துவதா அல்லது திரைப்படம் தயாரித்து அதில் வரும் பணத்தை பயன்படுத்துவதா என்பது போன்ற பல ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிகர் சங்க தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர் பூச்சி முருகன் ஆகியோர் நேரில் சந்தித்தனர்.
அப்போது நடிகர் சங்க கட்டடம் குறித்த தகவல்களை அக்கறையுடன் விசாரித்து கேட்டு தெரிந்துகொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினி அதுகுறித்து தனது ஆலோசனைகளையும் வழங்கியதாக பாண்டவர் அணியினர் தெரிவித்தனர்.