எல்கேஜி, மூக்குத்தி அம்மன் படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி கதையின் நாயகனாக நடித்துள்ள படம் வீட்ல விசேஷம். இந்தியில் வெளியான பதாய்ஹோ என்கிற படத்தின் ரீமேக் ஆக இந்த படம் உருவாகியுள்ளது.

இந்த படத்தில் கதாநாயகியாக லலிதா நடிக்க,முக்கிய வேடங்களில் சத்யராஜ். ஊர்வசி இருவரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ஆர்ஜே பாலாஜியும், என்ஜே சரவணன் என்பவரும் இணைந்து இயக்கியுள்ளனர். வரும் ஜூன் 17ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் நடித்த சத்யராஜ், ஊர்வசி பற்றி ஆர்ஜே பாலாஜி கூறும்போது, ஏற்கனவே மூக்குத்தி அம்மன் படத்தில் ஊர்வசியுடன் இணைந்து நடித்ததால் இந்த படத்தில் நடிக்கும்போது ரொம்பவே எளிதாக இருந்தது.

அதேசமயம் ஒரு இயக்குனராக சத்யராஜை இயக்குவது மகிழ்ச்சியான விஷயம். அவரிடம் நான் கதை சொன்னபோது, எனக்கு 90களில் என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு போன்ற படங்களில் பார்த்த சத்யராஜ் தான் வேண்டும் என்று அவரிடம் கோரிக்கை வைத்தேன். அதேபோன்ற நடிப்பை அவர் இதில் வழங்கியுள்ளார் என்று கூறினார் ஆர்ஜே பாலாஜி.
