தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகும் ஒருவர் உச்சகட்டமாக என்ன சாதிக்க வேண்டுமோ அந்த சாதனையாக சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து தர்பார் என்கிற படத்தை இயக்கியதன் மூலம் மிகப்பெரிய சாதனை இலக்கை அடைந்து விட்டார் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ். இன்னொரு பக்கம் தயாரிப்பாளராக மாறி நல்ல படைப்பாளிகளையும் குறிப்பாக தன்னிடம் பணியாற்றிய உதவி இயக்குனர்களையும் கைதூக்கிவிடும் விதமாக படங்களையும் தயாரித்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது பர்ப்பிள் புல் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து 1947 ஆகஸ்ட் 16 என்கிற பெயரில் புதிய படம் ஒன்றை தயாரித்து வருகிறார் ஏ.ஆர் முருகதாஸ். அவரிடம் நீண்ட நாட்களாக உதவி இயக்குனராக பணியாற்றி வரும் என்.எஸ் பொன்குமார் என்பவர்தான் இந்த படத்தை இயக்குகிறார்.
கவுதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்க ரேவதி என்கிற அறிமுக நடிகை கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முக்கால்வாசிக்கு மேல் முடிவடைந்துவிட்டது. படத்தின் டைட்டிலை பார்த்ததுமே கதை இதுதான் என்பதும் கதை நிகழும் காலகட்டமும் ஓரளவு புரிந்திருக்கும்.
படம் பற்றி இயக்குனர் பொன்குமார் கூறுகையில், “இது சுதந்திரப் போராட்டக் கதையல்ல, ‘சுதந்திரம் என்றால் என்ன’ என்பதை புரிந்து கொள்ளும் அப்பாவி கிராம மக்கள் கூட்டம் பற்றிய கதை. அவர்களில் ஒருவர் தான் கதாநாயகன், எப்பொழுதும் ஆக்ரோஷமும் கோபமும் கொண்ட இந்த கதாபாத்திரத்தில் கவுதம் கார்த்திக் நடிக்கிறார்” என கூறியுள்ளார்