இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கும் படங்களுக்கு மட்டுமல்ல, அவர் தனது தயாரிப்பு நிறுவனமான நீலம் புரடக்சன் சார்பில் தயாரிக்கும் படங்களுக்கும் கூட ரசிகர்களிடம் அதே அளவு எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. பரியேறும் பெருமாள் படத்தில் அவர் துவங்கி வைத்த அந்த எதிர்பார்ப்பு அதற்கு அடுத்ததாக இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, ரைட்டர் என அவர் தயாரிக்கும் படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றாமல் அவர்களது ரசனைக்கு நல்ல விருந்து அளித்து வருகின்றன.
அந்த வகையில் பா.ரஞ்சித் தயாரிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் சேத்துமான். அறிமுக இயக்குனர் தமிழ் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
ஒரு தாத்தாவுக்கும் பேரனுக்கும் இடையேயான மாசற்ற அன்பை பற்றி சொல்லும் கதையாக இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படம் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய வறுகறி என்கிற நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் தாத்தாவாக மாணிக்கமும் பேரனாக அஸ்வினும் நடித்துள்ளனர்.
பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளை பெற்ற சேத்துமான் திரைப்படம் வரும் மே 27ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாக இருக்கிறது.