இசைஞானி இளையராஜாவின் இளைய வாரிசாக திரையுலகில் இசையமைப்பாளராக களம் இறங்கியவர் யுவன்சங்கர்ராஜா. பார்த்திபன் சரத்குமார் இணைந்து நடித்த அரவிந்தன் என்கிற படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமான யுவன் ஷங்கர் ராஜா கிட்டத்தட்ட திரையுலகில் 25 வருடங்களை வெற்றிகரமாக ஒரு முன்னணி இசையமைப்பாளராக கடந்து வந்துள்ளார்.
அனைத்து நடிகர்களுக்கும் ஹிட் பாடல்களை கொடுத்துள்ள யுவன்சங்கர் ராஜா கார்த்தியின் முதல் படமான பருத்திவீரன் படத்தில் ஆரம்பித்து நான் மகான் அல்ல, பையா, பிரியாணி என கார்த்தியின் திரையுலக வாழ்க்கையில் மிக முக்கியமான ஹிட் பாடல்களை கொடுத்தவர். தற்போது அவர் நடித்து விரைவில் வெளியாக உள்ள விருமன் படத்திற்கும் யுவன் சங்கர் ராஜாதான் இசை அமைத்துள்ளார்.
அதுமட்டுமல்ல கார்த்தியும் யுவன் சங்கர் ராஜாவும் ஒரே பள்ளியில் படித்த பள்ளி தோழர்களும் கூட. அந்த வகையில் தங்களது நட்புக்கு மரியாதை செய்யும் விதமாகவும் யுவன் சங்கர் ராஜாவின் 25ஆம் வருடத்தைக் கொண்டாடும் விதமாகவும் மிக விலை உயர்ந்த ரோலக்ஸ் கடிகாரம் ஒன்றை யுவன்சங்கர் ராஜாவுக்கு பரிசளித்து கவுரவப்படுத்தி உள்ளார் கார்த்தி.