இயக்குனர் வெற்றிமாறனை பொருத்தவரை அவர் உருவாக்கும் கதை யாரை ஹீரோவாக கேட்கிறதோ அவர்களையே தேர்வு செய்வார். அந்த வகையில் தற்போது அவர் இயக்கி வரும் விடுதலை படத்தில் சூரி கதையின் நாயகனாகவும் விஜய்சேதுபதி முக்கிய கதாபாத்திரத்திலும் எடுத்து வருகின்றனர்.
இந்த புது மாற்றமே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் அதிகப்படுத்தியுள்ளது. சீரான இடைவெளியில் இந்தப் படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சத்தியமங்கலம் பகுதியில் உள்ள அடர்ந்த காடுகளிலும் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு செங்கல்பட்டிலும் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு திண்டுக்கல் பகுதியில் உள்ள சிறுமலை மலை பகுதியிலும் படமாக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது நான்காம் கட்ட படப்பிடிப்பும் அதே சிறுமலை பகுதியில் 50 நாட்கள் திட்டமிடப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில்தான் விஜய்சேதுபதி எதிரிகளுடன் மலைப்பகுதியில் மோதும் சண்டைக்காட்சிகளை படமாக்கியுள்ளனர். இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்த சண்டைக் காட்சிகளில் டூப் போடாமலேயே ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார் விஜய் சேதுபதி. இந்த நான்காம் கட்ட படப்பிடிப்பில் மட்டும் கிட்டத்தட்ட 30 நாட்கள் இந்த பகுதியில் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து கொடுத்துள்ளார் விஜய்சேதுபதி.
இதைத்தொடர்ந்து இன்னும் சில நாட்கள் நடைபெற உள்ள படப்பிடிப்பு வரும் ஜூன் 10ஆம் தேதியுடன் முடிவடையும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.. விண்ணைத்தாண்டி வருவாயா, கோ, யாமிருக்க பயமே உள்ளிட்ட ஹிட் படங்களை தயாரித்த எல்ரெட் குமார் தான் இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது