இமைக்கா நொடிகள், அதன்பிறகு தற்போது விக்ரம் நடிக்கும் கோப்ரா என ஒரு முன்னணி இயக்குனராக வளர்ந்துவிட்ட இயக்குனர் அஜய் ஞானமுத்து திரையுலகில் முதன் முதலாக அடியெடுத்து வைத்தது அவர் இயக்கிய டிமாண்டி காலனி படம் மூலமாகத்தான். ஹாரர் படங்களிலேயே சற்று வித்தியாசமான முயற்சியாக இந்த படத்தை இயக்கியிருந்தார் அஜய் ஞானமுத்து.
அவரது முதல் கதாநாயகனாக அருள்நிதி நடித்திருந்தார் இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றதால் தான், அவர் இமைக்காநொடிகள் படம் இயக்கிய போதும் தற்போது கோப்ரா படத்தை இயக்கி வரும் நிலையிலும் அவரது படங்களுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
டிமாண்டி காலனி படம் வெளியாகி 7 வருடங்கள் ஓடிவிட்ட நிலையில் தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இந்த இரண்டாம் பாகத்திலும் அருள்நிதி கதாநாயகனாக நடிக்கிறார். ஒரு சின்ன மாற்றம் என்னவென்றால் இந்த படத்திற்கு கதை திரைக்கதை வசனம் எழுதி உள்ளதுடன் அஜய் ஞானமுத்து இந்த படத்தை தயாரிக்கவும் செய்கிறார். ஆனால் படத்தை அவரிடம் இணை இயக்குனராக பணியாற்றிய வெங்கி வேணுகோபால் என்பவர் தான் இயக்குகிறார்.
இந்த பட உருவாக்கம் பற்றி அஜய் ஞானமுத்து கூறும்போது இந்தப்படம் வெளியான சமயத்தில் இருந்தே இரண்டாம் பாகம் பற்றி பலரும் ஆர்வமாக விசாரித்தார்கள். இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு இருந்துகொண்டே இருந்தது. ஹாலிவுட் படங்களில் அடுத்தடுத்து பாகங்களைத் தயாரிக்கும் பாணி எனக்கு பிடித்த ஒன்று.. இயக்குனராக எனக்கு முதல் பட வாய்ப்பு அளித்து ஆதரவு தந்த நாயகன் அருள்நிதி இந்த படத்தில் என்னை தயாரிப்பாளராகவும் மாற்றியுள்ளார்” என்று கூறியுள்ளார்.