தமிழ் திரையுலகில் ஒரு சிலர் இரண்டு படங்களில் நடித்ததும் தங்களை ஏதோ பெரிய அறிவுஜீவிகள் போல நினைத்துக்கொண்டு தாங்கள் பேசுவது எல்லாமே மிகப்பெரிய சொற்பொழிவு போன்று எண்ணிக்கொண்டு பேசுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். நடிகர் ஆர்ஜே பாலாஜி தற்போது பேசியிருப்பதை பார்க்கும்போது அவரும் இந்த பட்டியலில் ஒரு ஆள் தான் என்றே நினைக்கத் தோன்றுகிறது..
சமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆர்ஜே பாலாஜி பேசும்போது அங்கே ஒரே பெஞ்ச்சில் இரண்டு ஆண்கள் இரண்டு பெண்கள் என மாணவர்கள் அமர்ந்திருப்பதைப் பார்த்து சந்தோசப்பட்டுள்ளார். இப்படி இருந்தால்தான் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மாணவப்பருவத்திலேயே புரிதல் வரும் என்று பேசியிருக்கிறார்.
இது எல்லாம் சரிதான்.. ஆனால் அதை தொடர்ந்து அவர் பேசியது தான் தற்போது கேலிக்குரிய விஷயமாகி இருக்கிறது..
அதாவது மன்னன் படத்தில் படித்து தொழிலதிபராக ஒரு கம்பெனியை நிர்வகிக்கும் விஜயசாந்தியை கெட்டவன் போல் காட்டி இருக்கிறார்கள்.. காபி போட்டுத் தரும் குஷ்புவை குடும்பப் பெண்ணாக காட்டுகிறார்கள்.. அதேபோல படையப்பா படத்தில் வெளிநாட்டில் படித்து வரும் ரம்யா கிருஷ்ணன் கதாபாத்திரத்தை கெட்டவளாக சித்தரித்து குடும்பப்பாங்காக இருக்கும் சௌந்தர்யாவை நல்லவளாக காட்டுகிறார்கள்.
நம் சினிமா இப்படித்தான் பெண்களை பற்றி தவறாக சித்தரிக்கிறது. நான் ரஜினியின் ரசிகன் தான். ஆனாலும் இதுபோன்ற விஷயங்களை என்னால் விமர்சிக்காமல் இருக்க முடியவில்லை” என்று பேசியுள்ளார் ஆர்ஜே பாலாஜி
சினிமாவில் ஒரு நடிகராக அதிலும் தற்போது இயக்குனராக மாறியுள்ளார் ஆர்ஜே பாலாஜி இப்படி பேசியதுதான் ஆச்சரியமளிக்கிறது. கடந்த வருடம் அவரது இயக்கத்தில் வெளியான மூக்குத்தி அம்மன் படத்தில் ஒரு சாமியாரை கெட்டவராக காட்டியிருந்தார். சாமியாரை கெட்டவராக காட்ட வேண்டிய காரணம் என்ன.? தற்போது இருக்கும் சாமியார்களில் ஒருசிலர் மோசமானவர்களாக, ஊரை ஏமாற்றுபவர்களாக இருக்கிறார்கள் என்பதால்தானே அப்படி ஒரு கதாபாத்திரத்தை மையப்படுத்தி அந்த படத்தை எடுத்தார்.
அதேபோலத்தான் எவ்வளவோ படித்திருந்தாலும் மிகப்பெரிய பொறுப்பில் இருந்தாலும் சில பெண்கள் ஆணவத்துடன் தலைக்கனத்துடன் மற்றவர்களை துன்புறுத்தும் நோக்கில் செயல்படுவதை பல இடங்களில் கேள்விப்பட்டிருக்கிறோம்.. பார்த்திருப்போம்.. அப்படி ஒரு கதாபாத்திரத்தை மையப்படுத்தி தான் அந்த படங்கள் உருவாக்கப்பட்டதே தவிர, படித்த நவநாகரீக பெண்கள் அனைவரும் திமிர் பிடித்தவர்கள், கெட்டவர்கள் என்பது போன்று அந்த இரண்டு படங்களிலுமே சொல்லப்படவில்லை.
எப்படி சாமியார்களில் நூற்றில் ஓரிருவர் கெட்டவர்களாக இருக்கிறார்கள் என ஆர்ஜே பாலாஜிக்கு தோன்றியதோ, அதேபோலத்தான் மன்னன் படையப்பா படங்களின் இயக்குனர்களுக்கும், அதில் நடித்த சூப்பர் ஸ்டாருக்கும் தோன்றியிருக்கிறது.. இதில் என்ன தவறு இருக்கிறது..? இனியாவது ஆர்ஜே பாலாஜி பொதுவெளிகளில் பேசும்போது வார்த்தைகளை கவனமாக பயன்படுத்துவாரா என பார்ப்போம்