தற்போதைய சூழலில் பிஸியான அதே சமயத்தில் மிக விரைந்து படங்களை முடிப்பதில் வல்லவர் யார் என்றால் இயக்குனர் ஆர்.கண்ணன் என எந்த தயக்கமும் இல்லாமல் சொல்லிவிடலாம். அந்த வகையில் தற்போது காசேதான் கடவுளடா, தி கிரேட் இந்தியன் கிச்சன் ஆகிய படங்களை இயக்கி முடித்து ரிலீசுக்கு தயாராக வைத்து விட்டார் ஆர் கண்ணன்.
இன்னொரு பக்கம் ஹன்சிகா கதாநாயகியாக நடிக்கும் ஹாரர் படத்தின் பாதி படப்பிடிப்பையும் நடத்தி முடித்து விட்டார். இந்த நிலையில் யோகிபாபுவை கதாநாயகனாக வைத்து பெரியாண்டவர் என்கிற படத்தை இயக்க உள்ளார் ஆர்.கண்ணன்.

தர்மபிரபு படத்தில் எமதர்மராஜாவிவாக நடித்த யோகிபாபு, பெரியாண்டவர் படத்தில் சிவபெருமான் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது ஒரு டைம் டிராவல் கதையாகும். இந்த படத்திற்காக சுமார் 50 லட்சம் ரூபாய் செலவில் கிழக்கு கடற்கரை சாலையில் மிகப்பெரிய சிவபெருமான் கோவில் செட் ஒன்று போடப்பட இருக்கிறது.
இந்த படம் வசனத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாவதால் வசனத்தை கபிலன் வைரமுத்து எழுதுகிறார். ஏற்கனவே யோகிபாபு கதையின் நாயகனாக நடித்த கூர்க்கா, தர்மபிரபு, மண்டேலா உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதால், இந்த பெரியாண்டவர் படமும் அந்த பட்டியலில் இடம் பிடிக்கும் என எதிர்பார்க்கலாம்.
இதற்கு முன்னதாக காசேதான் கடவுளடா படத்திலும் ஆர்.கண்ணன், யோகிபாபு இருவரும் இணைந்து பணியாற்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.