மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் கணவரும் பாலிவுட் தயாரிப்பாளருமான போனி கபூர் தொடர்ந்து தமிழில் திரைப்படங்களை தயாரிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். அதிலும் குறிப்பாக அஜித்தின் படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறார்.
அந்த வகையில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு நேர்கொண்ட பார்வை, இந்த வருடம் வெளியான வலிமை என இரண்டு படங்களை அஜித்தை வைத்து தயாரித்தார். இந்த இரண்டு படங்களையும் இயக்குனர் வினோத் இயக்கியிருந்தார்.
இந்தநிலையில் அஜித் நடிப்பில் வினோத் இயக்கி வரும் மூன்றாவது படத்தையும் போனிகபூர் தான் தயாரிக்கிறார். ஏற்கனவே நேர்கொண்ட பார்வை, அதன்பிறகு வலிமை என போனி கபூர் தயாரித்த அஜித் படங்கள் பெரும்பாலும் நீண்டநாள் தயாரிப்பில் இருந்ததுடன், வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இதனால் அஜித் ரசிகர்கள் பலர் பொறுமையிழந்து பிரதமர் மோடி வரை அஜித் படத்துக்கு அப்டேட் கொடுங்கள் என கேட்கும் அளவுக்கு நிலைமை சென்றது.
இந்த நிலையில் சமீபத்தில் பேசியுள்ள போனிகபூர், இந்த படத்தின் 35 நாட்கள் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது.. வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து விடும்.. இந்த வருட தீபாவளி அஜித்தின் தீபாவளியாக இருக்கும் என்று கூறியுள்ளார். அவரது இந்த அறிவிப்பு அஜித் ரசிகர்களுக்கு இந்த கோடை வெயிலில் குளிர்ச்சியை ஏற்படுத்த பெய்த மழையாக அமைந்துள்ளது