தமிழக முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது ஒன்றிரண்டு படங்கள் பார்த்திருப்பதாக செய்திகள் வெளி வந்திருக்கலாம். ஆனால் முதல்வரான பின் அரசாங்க பணிகளை மட்டுமே கவனித்து வருபவர் தற்போது முதன்முறையாக தனது மகன் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை பார்த்து ரசித்துள்ளார்.

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி, தான்யா ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் இந்தியில் வெளியான ஆர்டிகிள் 15 என்கிற படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ளது. வலிமை படத்தை தயாரித்த போனிகபூர், ஜி ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளார்.

படம் பார்த்துவிட்டு நன்றாக வந்திருக்கிறது என படக்குழுவினர் அனைவரையும் பாராட்டியுள்ளார் முதல்வர் முக ஸ்டாலின்

தன் மகன் நடித்த படம் என்பதால் முதல்வர் இதை பிரத்தியோகமாக பார்த்துள்ளார் என்று சொல்வதை விட, அவருடைய தந்தை மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி எழுதிய நெஞ்சுக்கு நீதி என்கிற புத்தகத்தின் தலைப்பே இந்த படத்திற்கு வைத்திருப்பதால் படத்தை எவ்வாறு எடுத்து இருப்பார்கள் என்கிற ஆர்வத்திலும் இந்த படத்தை பார்க்க வந்துள்ளார் என்று கூட சொல்லலாம்.