லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் திரைப்படம் வரும் ஜூன் மூன்றாம் தேதி வெளியாக இருக்கிறது. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் விஜய்சேதுபதி பஹத் பாசில், நரேன் காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
நேற்று நடைபெற்ற இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் சூர்யாவும் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த விழாவில் படத்தில் வில்லனாக நடித்த விஜய்சேதுபதி பேசும்போது, “இந்த படத்தில் அப்படி இப்படி என சூப்பராக நடிக்கவேண்டும் என்றெல்லாம் நினைக்கவில்லை. கமல் இருக்கும் படத்தில் நானும் நடிக்கிறேன் என்கிற ஆசையில் மட்டுமே நடிக்க வந்தேன். அவருடன் இணைந்து நடித்தது போல அவரது டைரக்ஷனிலும் நடிக்க ஆசைப்படுகிறேன்” என்ற ஒரு கோரிக்கையை வைத்தார்
கமல் பேசும்போது, “இந்த படத்திற்கு கடைசி நேரத்தில் கை கொடுத்த தம்பி சூர்யாவுக்கு நன்றி. ஹிந்தி, சைனீஸ் என எந்த மொழியை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளுங்கள்.. இந்தி ஒழிக என்று சொல்ல மாட்டேன் அதேசமயம் தமிழுக்கு எந்த ஒரு இடையூறும் வரவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நமது கடமை” என்று கூறினார்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறும்போது, “கமல் சாரை பார்த்து நான் சினிமாவிற்கு வந்தவன். அவர் ரசிகனாக இருந்து அவரது படத்தை இயக்கியிருக்கிறேன்.
இந்த படத்தில் நடைபெற்ற 125 நாட்கள் படப்பிடிப்பில் கிட்டத்தட்ட 75 நாட்கள் சண்டை காட்சியை மட்டுமே படமாக்கி இருக்கிறோம். அதேசமயம் யாருக்கும் எந்த ஒரு சிறு காயம் கூட இல்லாமல் திறமையாக இந்த சண்டைக் காட்சிகளை படமாக்க உதவிய அன்பறிவு மாஸ்டருக்கு நன்றி.
மற்ற படங்களை எல்லாம் மிஞ்சும் வகையில் இந்த படத்தை இயக்கி இருக்கிறேனா என்று கேட்கிறார்கள். நான் எனக்கு தெரிந்து நேர்மையாக இந்த படத்தை இயக்கியிருக்கிறேன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்த படம் பூர்த்தி செய்யும் என நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்
இந்த படத்தை தமிழகமெங்கும் வெளியிடும் உரிமையை வாங்கியுள்ள உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, “ஏதோ இந்த படத்தை கமலை மிரட்டி வாங்கி விட்டது போன்று பலர் கூறிவருகிறார்கள் கமலை யாராலும் மிரட்ட முடியாது” என்று கூறினார்