கடந்த 2003-ல் சக்சஸ் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் துஷ்யந்த். இவர் நடிகர் திலகம் சிவாஜியின் மூத்த மகன் ராம்குமாரின் மகன் ஆவார்.

அதைத்தொடர்ந்து மச்சி என்கிற இன்னொரு படத்தில் நடித்த துஷ்யந்த் ரசிகர்களிடம் தனது தாத்தா, சித்தப்பா போல வரவேற்பு பெறாததால் சினிமாவை விட்டு கொஞ்ச காலம் ஒதுங்கியிருந்தார். இந்த நிலையில் தற்போது சூட்டிங் ஸ்டார் என்கிற படத்தின் மூலம் மீண்டும் திரையுலகிற்கு திரும்பியுள்ளார்.

பாலிவுட், ஹாலிவுட் மற்றும் டோலிவுட் என பல்வேறு துறைகளில் பணியாற்றிய அனுபவம் கொண்ட ரமணன் இந்த படத்தை இயக்குகிறார். இதில் துஷ்யந்த் தவிர விவேக் பிரசன்னா, தெலுங்கு நடிகர் சுனில் ஷெட்டி, பாலிவுட் நடிகர் ரவி கிஷன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

வாழ்க்கையில் ஏற்கனவே பல ஏமாற்றங்களை சந்தித்த ஒருவரை சுற்றியுள்ளவர்கள் மீண்டும் மீண்டும் எப்படி ஏமாற்றுகின்றனர் என்பதை மையப்படுத்தி இந்தப் படம் காமெடியாக உருவாகிறதாம்.