எண்பதுகளில் வெள்ளி விழா நாயகன் எனக் கொடி கட்டிப் பறந்தவர் நடிகர் மோகன். சில்வர் ஜூப்ளி படங்களாக கொடுத்த இவர் வழக்கமாக பல நடிகர்கள் கால ஓட்டத்தில் அடித்துச் செல்லப்படுவது போல திரையுலகை விட்டு ஒதுங்கினார். தற்போது வீறுகொண்டு எழுந்து மீண்டும் திரையுலகை ஒரு கை பார்த்து விடுவது என கோதாவில் குதித்து ஹரா என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படம் ஆக்சன் திரைப்படமாக உருவாகி வருகிறது. தாதா87 என்கிற படத்தில் சாருஹாசனையே தாதாவாக நடிக்க வைத்த இயக்குனர் விஜய் ஸ்ரீ தான் இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் முக்கியமான சமூக பிரச்சனை பற்றி பேசும் விதமாக உருவாக்கப்பட்டு வருகிறதாம். குறிப்பாக பெண்களுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்பதை ஆணித்தரமாக வலியுறுத்தும் விதமாக இது தயாராகி வருகிறது என்கிறார்கள்.

இதன் ஒரு கட்டமாக இந்த படத்தில் தாய் ஒருவர் தனது மகளுக்கு மாதவிலக்கு சமயத்தில் பள்ளியிடம் விடுமுறை கேட்பதாகவும் அதற்கு நிர்வாகம் மறுப்பதாகவும் ஒரு காட்சி படமாக்கப்பட்டது. இந்த காட்சியில் உள்ள நிதர்சனத்தை, வேதனையை உணர்ந்த மோகன் மற்றும் ஹரா படக்குழுவினர் மாணவிகளுக்கு மாதந்தோறும் இதுபோன்ற மாதவிலக்கு நாட்களில் மூன்று நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டுமென தமிழக அரசிடம் ஒரு கோரிக்கை வைத்துள்ளது.

இந்த காட்சியை படமாக்கிய சமயத்தில்தான் ஸ்பெயின் நாட்டில் இப்படி மாணவிகளுக்கு மாதவிலக்கு சமயத்தில் விடுமுறை அளிக்க வேண்டும் என்கிற உத்தரவு நிறைவேறியதையும் மகிழ்ச்சியுடன் படக்குழுவினர் பகிர்ந்து கொண்டுள்ளனர்.