வாரிசு நடிகர்கள் வருடந்தோறும் அறிமுகமாகிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அதில் ஒரு சிலர் ஒன்றிரண்டு படங்களோடு கால ஓட்டத்தில் அப்படியே காணாமல் போய்விடுகின்றனர். ஆனால் ஒரு சிலர் முன்னணி நடிகர் என்கிற லெவலுக்கு வர முடியாவிட்டாலும் கூட, சினிமாவில் தங்களது இருப்பை ஓரளவுக்கு வெற்றிகரமாக நிலைநிறுத்தி வருகின்றனர். அப்படி இரண்டாவது பட்டியலை சேர்ந்தவர்தான் சத்யராஜின் மகனாக சினிமாவில் அறிமுகமான சிபி சத்யராஜ்.

இன்று அவர் நடித்துள்ள ரங்கா என்கிற திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் சிபி சத்யராஜ் என டைட்டில் கார்டு போடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு சிபிராஜ் என்று அழைக்கப்பட்டு வந்த இவர் திடீரென தனது தந்தையின் முழுப்பெயரையும் ஏன் சேர்த்துக் கொண்டார் என்கிற கேள்வியை அவரிடமே கேட்கப்பட்டது.

அதுபற்றி அவர் கூறும்போது, “அறிமுகமான காலகட்டத்தில் சிபி என்று மட்டும் தான் என் பெயரை குறிப்பிட்டு வந்தனர். அதன்பிறகு சிபிராஜ் என மாற்றிக் கொண்டேன். இப்போது என்னுடைய தந்தை சத்யராஜ் பாகுபலி படத்தில் நடித்த பிறகு தென்னிந்தியா மட்டுமல்லாமல் பாலிவுட் அளவிலும் மிகப்பெரிய பிரபலமான ஒரு நடிகர் ஆகிவிட்டார்.

அவருடைய மகன் நான் என்பது தெரியட்டும் என்பதற்காகவே அவருடைய பெயரையும் தற்போது சேர்த்துககொண்டேன்.. எல்லாம் ஒரு சுயநலம் தான்” என்று கூறியுள்ளார் சிபி சத்யராஜ்.