முதல் படம் இயக்கும் பல இயக்குனர்கள் அந்த படத்தை வெற்றிகரமாக கொடுத்ததும், மீண்டும் தங்களது எண்ணத்தில் உருவான கதையையே முன்பைவிட இன்னும் பவர்ஃபுல்லாக இயக்குவதற்கு முயற்சி செய்வார்கள். ஆனால் இயக்குனர் அருண்ராஜா காமராஜுக்கு கிடைத்த வாய்ப்பு வேறு மாதிரியானது.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கனா என்கிற படத்தை இயக்கி வெற்றிகரமான இயக்குனராக தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் அருண்ராஜா காமராஜ். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் என்ன மாதிரியான படம் இயக்க போகிறார் என்று எதிர்பார்த்து வந்த நிலையில் இந்தியில் வெற்றி பெற்ற ஆர்டிகிள் 15 என்கிற படத்தை நெஞ்சுக்கு நீதி என்கிற பெயரில் ரீமேக் செய்து இயக்கியுள்ளார் .

இந்த படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் பெரும்பாலும் இந்தியில் வெற்றி பெற்ற படங்களை தமிழில் பிரபல இயக்குனர்களை வைத்து ரீமேக் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார் அப்படித்தான் இந்தியில் வெற்றி பெற்ற பிங்க் படத்தை இயக்குனர் வினோத்தை சம்மதிக்க வைத்து அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை என்கிற பெயரில் ரீமேக் செய்தார்.. அதேதான் நெஞ்சுக்கு நீதி பட ரீமேக்கில் அருண்ராஜா காமராஜ் விஷயத்திலும் நடந்துள்ளது.
இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் உதயநிதி பேசும்போது கூட, “போனிகபூர் இந்த படத்தை ரீமேக் செய்யலாம் என கூறியபோது சந்தோசமாக இருந்தது. ஆனால் பலரும் இந்த படத்தை ரீமேக் செய்ய முன்வரவில்லை. அப்போதுதான் அருண்ராஜா காமராஜிடம் இந்த பொறுப்பை ஒப்படைக்க முடிவு செய்தோம்.. அவரும் ஏற்றுக்கொண்டார்.

என்னுடைய தாத்தா கலைஞர் எழுதிய புத்தகம்தான் நெஞ்சுக்கு நீதி அவரிடமிருந்தே இந்த டைட்டிலை பெற்றுள்ளோம்.. என் தந்தை என்னிடம் கூறும்போது கூட பார்த்து கவனமாக செய்யுங்கள் என்று அறிவுறுத்தினார் நிச்சயமாக அதற்கு நியாயம் செய்துள்ளேன் என நினைக்கிறேன்” என்கிறார் உதயநிதி.