எண்பதுகளில் தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் இருவரும் கோலோச்சி வந்த அந்த காலகட்டங்களில் கூட, அவர்களுக்கு டப் கொடுக்கும் விதமாக வெள்ளிவிழா படங்களாக கொடுத்து கொடிகட்டி பறந்த நடிகர்கள் இருவர்.. ஒருவர் ராமராஜன்.. இன்னொருவர் மோகன்.. ஆனால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு இருவரின் அலையும் அப்படியே ஓய்ந்து விட்டது.
கால மாற்றத்திற்கு ஏற்ப இவர்கள் தங்களை அப்டேட் செய்து கொள்ளாததால் சினிமாவை விட்டு ஒதுங்கும் நிலை ஏற்பட்டது. தவிர இருவருமே நடித்தால் கதாநாயகனாக தான் நடிப்பேன் என பிடிவாதமாக இருந்தார்கள்.. இவர்களது சமகாலத்தில் கோலோச்சிய சத்யராஜ், பிரபு, கார்த்திக், அர்ஜுன் இவர்களெல்லாம் குணச்சித்திர நடிகர்களாக மாறி இன்றும் திரையுலகில் தங்களது இருப்பை தக்க வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில்தான் மோகன் மீண்டும் கதாநாயகனாக ஹரா என்கிற படத்தில் நடித்து வருகிறார். வழக்கமாக மேடைகளில் மைக் பிடித்து பாடுபவராக, குடும்பத்தின் மூத்த இளைஞனாக மோகனை பார்த்து பழகியவர்களுக்கு இந்த படத்தில் தனது அதிரடி ஆக்சன் முகத்தை காட்ட இருக்கிறார் மோகன்.
சாருஹாசனை வைத்து தாதா 87 என்கிற படத்தை இயக்கிய விஜய்ஸ்ரீ என்பவர்தான் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் சொல்லவரும் கருத்து என்னவென்றால் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே எப்படி குட் டச். பேட் டச் என சொல்லிக் கொடுக்கிறோமோ அதேபோல ஐபிசி சட்டங்களைப் பற்றி ஆரம்பத்தில் இருந்தே சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும் என்கிற கருத்தை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகிறது.
இந்த படத்தின் மூலம் மோகன் சொல்ல வரும் கருத்து ரசிகர்களை சென்று அடையுமா ? மோகனும் தனது பழைய பெருமையை இந்த படத்தின் மூலம் மீட்டு எடுப்பாரா பொறுத்திருந்து பார்க்கலாம்.