Home News Kollywood நடிகர் சங்க கட்டட நிதிக்காக கலைநிகழ்ச்சி நடக்குமா ? சுறுசுறுப்பான நடிகர் சங்கம்

நடிகர் சங்க கட்டட நிதிக்காக கலைநிகழ்ச்சி நடக்குமா ? சுறுசுறுப்பான நடிகர் சங்கம்

கடந்த மூன்று வருடங்களாக நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடந்தும் ரிசல்ட் அறிவிக்காமல் சங்கத்தை நீதிமன்றம் மூலமாக இதற்கு முந்தைய அரசாங்கம் முடக்கி வைத்திருந்தது. இந்த நிலையில் அப்போது நடந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை சமீபத்தில் நடைபெற்றது. இதில் நாசர், விஷால், கார்த்தி ஆகியோரைக்கொண்ட பாண்டவர் அணி வெற்றி பெற்றது.

இதை தொடர்ந்து நடிகர் சங்கத்தின் 66வது பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாண்டவர் அணியில் முக்கிய ஐந்து தூண்களான நாசர், விஷால், கார்த்தி, கருணாஸ், பூச்சி முருகன் ஆகியோருடன் முக்கிய உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீடியோ மூலமாக தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்.

நடிகர் சங்கம் முன்பு தற்போது இருக்கும் மிகப்பெரிய பிரச்சனையே முக்கால்வாசி கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில் பாதியில் நிற்கும் கட்டடத்தை முழுமையாக கட்டி பிடிக்க வேண்டிய வேலைதான். இதற்கு இன்னும் முப்பது கோடி ரூபாய் நிதி தேவைப்படுவதாக கூறிய நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் அடுத்தது தாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்பதையும் இந்த கூட்டத்தில் விலாவாரியாகப் பேசினார்.

இந்த கட்டிடத்தை கட்டி முடிக்க வங்கியில் கடன் தர தயாராக இருப்பதாகவும் அதே சமயம் கலை நிகழ்ச்சி நடத்தி நிதி திரட்ட இன்னொரு வழி இருப்பதாகவும் இதுகுறித்து ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் என்றும் கூறினார் விஷால்.

மேலும் நடிகர் சங்கத்திற்காக கட்டப்படும் கட்டிடம் என்பதால் மிகப்பெரிய நடிகர்களிடம் தனிப்பட்ட முறையில் சென்று நிதி கேட்பதற்கு வெட்கப்பட மாட்டோம் என்றும் கூறினார் விஷால். அப்படி கட்டி முடிக்கப்படும் நடிகர் சங்க கட்டடம் சென்னையின் மிகப்பெரிய அடையாளங்களில் ஒன்றாகவும் சுற்றுலா வருவோர் கூட நடிகர் சங்க கட்டடத்தை ஒருமுறை பார்த்து விட்டு செல்ல வேண்டும் என்கிற அளவிற்கு ஆர்வத்தை தூண்டும் விதமாகவும் இருக்கும் என்று விஷால் கூறினார்.