கேஜிஎஃப் படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து கன்னட திரைப்படங்களும் தமிழில் வெளியாக ஆரம்பித்துவிட்டன. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நடிகர் அர்ஜுனின் உறவினரான துருவ் சார்ஜா கன்னடத்தில் நடித்த படம் தமிழில் செம திமிரு என்கிற பெயரில் வெளியானது.
இதைத்தொடர்ந்து தற்போது கன்னட சினிமாவின் இன்னொரு இளம் ஹீரோவான ரக்ஷித் ஷெட்டி நடித்துள்ள சார்லி 777 திரைப்படம் தமிழில் வெளியாகிறது.
இந்தப் படம் தமிழில் வெளியாவதற்கு இன்னொரு காரணம் இந்த படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் பாபி சிம்ஹா நடித்துள்ளார் என்பது தான்.
ஆனால் சமீப நாட்களாக வெளியாகும் இந்த படத்தின் விளம்பரங்களில் ஹீரோ ரக்ஷித் ஷெட்டி மட்டுமே இருக்கிறாரே தவிர பாபி சிம்ஹாவின் புகைப்படம் கொண்ட போஸ்டர்கள் எதுவும் வெளியாகவில்லை.
எப்படி அறிமுகமில்லாத ஒரு கன்னட நடிகரை மையப்படுத்தி தமிழில் படத்திற்கு பப்ளிசிட்டி செய்கிறார்கள் என்பது ஆச்சரியமாக தான் இருக்கிறது..
பாபி சிம்ஹாவை முன்னிறுத்தி விளம்பரம் செய்தால் தான் படத்துக்கு ரசிகர்களிடம் கொஞ்சமாவது எதிர்பார்ப்பு ஏற்படும். அதை தவிர்த்துவிட்டு இப்படி கன்னட ஹீரோவை மட்டுமே முன்னிறுத்தி விளம்பரம் செய்வதை பார்த்தால் பாபி சிம்ஹா இருட்டடிப்பு செய்யப்படுகிறாரோ என்கிற சந்தேகம் தான் எழுகிறது.