சிவகார்த்திகேயன் நடிப்பில் வரும் மே 13ஆம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் டான். பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் எஸ்.ஜே சூர்யா வில்லத்தனம் கலந்த ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மற்றும் சமுத்திரக்கனி, பாலசரவணன் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தை அறிமுக இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்கியுள்ளார். இவர் அட்லீயிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர். இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் உள்ள ஜேப்பியார் கல்லூரியில் மாணவர்கள் மத்தியில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் எஸ்ஜே சூர்யா பேசும்போது படத்தின் இயக்குனர் சிபிசக்கரவர்த்தியை தமிழகத்தின் ராஜ்குமார் ஹிரானி என பாராட்டினார். ஏற்கனவே மெர்சல் படத்தில் அட்லி டைரக்ஷனில் தான் நடித்தபோது சிபியின் திறமையையும் கடுமையான உழைப்பையும் பார்த்து வியந்ததாக கூறினார் எஸ்.ஜே சூர்யா.
அதேபோல நடிகர் பாலசரவணன் பேசும்போது சிபி சக்கரவர்த்தியும் நானும் நான்கு வருடங்களுக்கு முன்பு இருந்தே நண்பர்கள் தான். இருவரும் இணைந்து ஒரு பைலட் திரைப்படத்தில் கூட ஒன்றாக வேலை பார்த்திருக்கிறோம் .அயலான் படத்தில் நடித்தபோது சிவகார்த்திகேயன் உடன் எனக்கு குறைந்த காட்சிகளே இருந்தன. ஆனால் அவர் கவலைப்படாதே அடுத்த படத்தில் உனக்கு இன்னும் அதிகமான ரோல் இருக்கும் என்று சொன்னார். சொன்னபடியே இந்த படத்தில் எனக்கு அதிக வாய்ப்பை தந்து, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார் சிவகார்த்திகேயன் என்று கூறினார்.