கமல் நடிப்பில் சில வருட இடைவெளிக்குப் பிறகு வெளியாக இருக்கும் படம் விக்ரம். மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கமலுடன் இணைந்துள்ளார் என்பதாலேயே இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு கமல் ரசிகர்கள் மட்டுமல்லாது சினிமா ரசிகர்கள் அனைவரிடமும் அதிகரித்துள்ளது.
மேலும் விஜய்சேதுபதி, பஹத் பாசில் என இளம் முன்னணி நடிகர்களும் இந்த படத்தில் நடித்திருப்பதால் நிச்சயம் விக்ரம் படம் கமலுக்கு மீண்டும் ஒரு கம்பேக் படமாக இருக்கும் என்பது உறுதியாக தெரிகிறது.
அதனால்தான் கமலும் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பம்பரமாக சுழன்று வருகிறார். ரயிலில் இந்த படத்தின் போஸ்டரை வரைந்து விளம்பரப்படுத்துவது முதல் புது புது விளம்பர உத்திகளை பயன்படுத்தி வருகிறார்.
அதேபோல இந்த படத்தின் தமிழக, மலையாள வெளியீட்டு உரிமைகளையும் ஒடிடி மற்றும் ஓவர்சீஸ் உரிமைகளையும் நல்ல விலைக்கு விற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
வரும் ஜூன் 3-ம் தேதி இந்தப் படம் வெளியாக இருப்பதை முன்னிட்டு இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்காக தற்போது மும்பைக்கு சென்றுள்ளார் கமல். அவருடன் இளைய மகள் அக்ஷராவும் சென்றுள்ளார். மும்பையில் உள்ள முன்னணி சேனல்கள் நடத்தும் ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் பேட்டிகளில் கலந்துகொண்டு விக்ரம் படத்தை இந்தியிலும் புரமோட் செய்ய இருக்கிறார் கமல்.