தமிழ் திரையுலகில் இருக்கும் பல பிரச்சனைகளில் முக்கியமான ஒன்று தான் பெப்சி தொழிலாளர்களின் ஊதிய பிரச்சினை. கிட்டத்தட்ட தமிழ் திரையுலகில் உள்ள 24 பிரிவுகளை சேர்ந்த தொழிலாளர்களை ஒருங்கிணைத்து செயல்பட்டு வரும் பெப்சியின் தலைவராக இயக்குனர் ஆர்.கே செல்வமணி பொறுப்பு வகித்து வருகிறார்.
அவர் எப்போதுமே பெப்சி தொழிலாளர்களுக்கு நிறைவான ஊதியம் கிடைக்கவே வழி செய்ய முயற்சிக்கிறார். அதேசமயம் தயாரிப்பாளர்களுக்கு இந்த சம்பள விகிதம் அதிகப்படியாக தெரிகிறது. அது மட்டுமல்ல கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தை பெப்சியை சேர்ந்த சிலர் அவமதிக்கும் விதமாக நடந்து கொண்டதாக சொல்லப்படுகிறது.
இதன்காரணமாக பெப்ஸி உடனான தங்களது ஒப்பந்தத்தை முடித்துக் கொள்கிறோம் என்றும் இனி தயாரிப்பாளர்கள் தங்கள் விருப்பம் போல யாருடன் வேண்டுமானாலும் பணி புரியலாம் என தயாரிப்பாளர்கள் சங்கம் ஒரு அறிக்கை வெளியிட்டது.
இது பெப்சி தொழிலாளர்கள் இடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இதற்கு முன்பும் இதே போல பல முறை தயாரிப்பாளர்களுக்கும் பெப்சி தொழிலாளர்களுக்கும் சம்பளம் விஷயமாக பிரச்சினை ஏற்பட்டு அதன்பின் மீண்டும் சமரசம் ஏற்பட்டுள்ள நிகழ்வுகளும் நிறைய உண்டு. அதேபோல இன்று மீண்டும் தயாரிப்பாளர்களுடன் பெப்சி சார்பாக ஆர்கே செல்வமணி பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார். இதில் மீண்டும் சுமூக முடிவு எட்டப்படும் என பெப்சி தொழிலாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.