சிங்கங்கள் உலவும் காட்டில் புள்ளிமான்களும் துள்ளி ஓடுவதுபோல விஜய், அஜித், சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்கள் ஒரு பக்கம் பரபரவென ஓடிக்கொண்டு இருக்க, தான் உண்டு தன் வேலை உண்டு என்று அமைதியாக தனது படங்களை கொடுத்து வருபவர் நடிகர் அருள்நிதி. பொதுவாகவே அருள்நிதி நடிக்கும் படங்கள் என்றால் நல்ல கதை அம்சம் கொண்ட படங்கள் என தாராளமாக சொல்லலாம். அவை வெற்றி பெறுகிறதா இல்லையா என்பது வேறு விஷயம்.
அந்தவகையில் தற்போது அருள்நிதி நடித்துள்ள தேஜாவு மற்றும் டைரி என இரண்டு படங்கள் அடுத்தடுத்து ரிலீசாக இருக்கின்றன. இது பற்றிய அறிவிப்பும் தற்போது வெளியாகியுள்ளது.
தேஜாவு படத்தை அறிமுக இயக்குனர் சீனிவாசன் இயக்கியுள்ளார். அருள்நிதிக்கு ஜோடியாக ஸ்மிருதி வெங்கட் நடித்துள்ளார். இவர் தனுஷின் மாறன் படத்தில் அவருக்கு தங்கையாக நடித்தவர். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகை மதுபாலா, காளி வெங்கட், மைம் கோபி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்தப்படம் கோடை விடுமுறையில் வெளியாகும் என தற்போது ஒரு போஸ்டருடன் கூடிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆனாலும் தேதி மட்டும் இன்னும் குறிப்பிடப்படவில்லை
அதேபோல அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள இன்னொரு படம் டைரி. இந்தப்படத்தை இன்னாசி பாண்டியன் என்பவர் இயக்கியுள்ளார். இந்தப்படம் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாக இருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அருள்நிதி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.