ராட்சசன் படத்தில் நடித்ததன் மூலம் புகழ் வெளிச்சம் பெற்றவர் நடிகை அம்மு அபிராமி. அந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக தனுஷுடன் இணைந்து அவரது முறைப்பெண்ணாக அசுரன் படத்தில் நடித்ததன் மூலம் அதிக அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மு அபிராமி.
இந்த நிலையில் தற்போது சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் கதாநாயகியாக நடிக்கும் பாலமுருகனின் குதூகலம் என்கிற படம் இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது.
அறிமுக நாயகன் பாலமுருகன் கதாநாயகனாக நடிக்கும் இந்தப்படத்தில் குக் வித் கோமாளி புகழ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தை மாண்புமிகு தமிழ்நாடு அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் சுவாமிநாதன் திருப்பூரில் நடைபெற்ற இந்த படத்தின் விழாவில் கலந்துகொண்டு துவங்கி வைத்தார்.
இந்த படத்தை அறிமுக இயக்குனர் உலகநாதன் சந்திரசேகரன் என்பவர் இயக்குகிறார். இவர் இயக்குனர் துரை செந்தில்குமாரிடம் துணை இணை இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.