ஒத்த செருப்பு என்கிற படத்திற்கு தேசிய விருது பெற்ற பார்த்திபன் அடுத்ததாக மீண்டும் ஒரு தேசிய விருதை கைப்பற்றும் நோக்கத்துடன் இரவில் நிழல் என்கிற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் சிறப்பம்சமே படம் முழுவதும் சிங்கிள் சாட்டில் எடுக்கப்பட்டிருப்பது தான். இன்னொரு சிறப்பம்சமாக ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார் நேற்று மாலை இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது

இந்த நிகழ்வில் பார்த்திபன் பேசும்போது, ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுடன் ஏலோலோ படத்தில் வேலை செய்ய வேண்டியது. அந்த படம் நடக்கவில்லை. அவருடன் வேலை செய்ய 20 வருடம் காத்திருந்தேன். இந்தப்படம் அவர் இருந்ததால் மட்டுமே சாத்தியம். அவர் இருக்கும் தைரியத்தில் தான் இந்த முயற்சியை செய்தேன். இந்த முயற்சி செய்ய ஆரம்பித்த போது எல்லோரும் முடியாது என்றார்கள் ஏன் முடியாது என முயற்சித்தது தான் இந்தப்படம். இதன் கதை சொன்னவுடனே அவரே பாவம் செய்யாதிரு மனமே என ஒரு சித்தர் பாடலை இசையமைத்து தந்தார். எப்படி படத்திற்கு முன்னதாக படத்திற்கு பொருத்தமாக ஒரு பாடலை தந்தார் என ஆச்சர்யமாக இருந்தது. இந்த கதைக்கு முழுக்க முழுக்க அவர் இசையால் உயிர் தந்துள்ளார், ஒரு பாடல் இருந்த இந்தப்படத்தில் ஆறு பாடல்கள் ஆகிவிட்டது. இந்தப்படம் ஒரு புது அனுபவமாக இருக்கும். எல்லோரது பாராட்டும் ஊக்கமும் தான் இந்தப்படம் எடுக்க காரணம்” என்றார்..

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பேசும்போது, “இயக்குநர் பார்த்திபன் சொல்லி இந்த கதை கேட்டபோது பிரமிப்பாக இருந்தது. அவரிடம் சினிமா மீதான காதல் இன்னும் இருக்கிறது. அவர் இந்த ஐடியா சொன்ன போது பைத்தியகாரத்தனமாக இருந்தது. இவ்வளவு நன்றாக செய்வார் என நினைக்கவில்லை. மிக நன்றாக எடுத்தார். நான் ஒரு படம் எடுத்தேன் 99 சாங்ஸ் ஆனால் அதை சரியாக ரிலீஸ் செய்ய முடியவில்லை. இந்தப்படம் எடுக்கும்போது ஷீட்டிங் ஸ்பாட்டில் எப்படி எடுக்கிறார்கள் என பார்த்தேன் பிரமிப்பாக இருந்தது. இந்தப்படம் வெளிநாட்டில் வெளியாகி இருந்தால் கொண்டாடி இருப்பார்கள் பரவாயில்லை இங்கு தமிழ் நாட்டில் கொண்டாடுவோம்” என்றார்.

ஆனால் இந்த படத்தின் டீசரை பற்றி எல்லோரும் பேசுவதற்கு பதிலாக விழாவில் பார்த்திபன் நடந்து கொண்ட விதத்தை பற்றி தான் மிகப்பெரிய அளவில் ஹைலைட்டாக பேசப்பட்டு வருகிறது.

கோபத்தில் அவர் மைக்கை கீழே தூக்கி எறிந்தது விழா அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது இப்போது சோசியல் மீடியா முழுவதும் இதைத்தான் பேசி வருகிறார்கள் ஒருவகையில் இந்த நிகழ்வு படத்திற்கு இலவச பப்ளிசிட்டி ஆகவும் அமைந்துவிட்டது என்று சொல்லலாம்.