பெரும்பாலான இயக்குனர்கள், தங்களின் வித்தியாசமான மற்றும் வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்களை எடுக்க முயற்சிப்பது அவ்வபோது நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் பெரும்பாலும் முதல் பாகத்தில் வெற்றி கண்டவர்கள் இரண்டாம் பாகத்தில் அதை சரியாக ரசிகர்களுக்கு கொடுக்கத் தவறி விடுகின்றனர். இதற்கு சண்டக்கோழி 2 படத்திலிருந்து சாமி 2 படம் வரை பல உதாரணங்களை சொல்லலாம்/
அதேசமயம் பாகுபலி-2, திரிஷ்யம் 2, கேஜிஎப் 2, சிங்கம் 2 என ஒரு சில படங்களின் இரண்டாம் பாகங்கள் முதல் பாகத்தை போலவே மிகப்பெரிய வெற்றியும் பெற்றுள்ளன.
இந்த நிலையில்தான் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தமிழில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் என எதுவும் இல்லாமல் இயக்குனர் விஜே கோபிநாத் இயக்கத்தில் ஜீவி என்கிற படம் வெளியானது. 8 தோட்டாக்கள் படத்தில் கதாநாயகனாக நடித்திருந்த வெற்றி இந்த படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். கருணாகரன் இன்னொரு கதாநாயகன் பாத்திரத்தில் நடித்திருந்தார்.

சாதாரணமாக வெளியான இந்தப் படத்தைப் பார்த்தவர்கள் இதில் சொல்லப்பட்ட கதையும் அது சொல்லப்பட்ட விதமும் கண்டு ஆச்சரியப்பட்டு போனார்கள். குறிப்பாக தொடர்பியல் விதியை மையப்படுத்தி இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டிருந்தது. இது ரசிகர்களை ரொம்பவே கவர்ந்தது. அந்த படத்திற்கு தேவையான வெற்றியும் கிடைத்தது.

அந்த வெற்றி கொடுத்த உற்சாகத்தில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தையும் ஜீவி-2 என்கிற பெயரில் இயக்கியுள்ளார் இயக்குனர் விஜே கோபிநாத்.

முதல் பாகங்களில் நடித்த, பணியாற்றிய நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் அப்படியே இந்தப்படத்திலும் இருக்கின்றனர். அதேசமயம் முதல் பாகத்திற்கு கதை வசனம் எழுதிய பாபு தமிழ் இந்த படத்தில் இடம்பெறவில்லை. அதற்கு பதிலாக இயக்குனர் கோபிநாத்தே இந்த இரண்டாம் பாகத்திற்கான கதையை எழுதி படமாகவும் இயக்கி எடுத்துவிட்டார். மாநாடு படத்தை தயாரித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தான் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்திற்கு தேசிய விருது பெற்ற மற்றும் மாநாடு என்கிற மிக சிக்கலான படத்தை தெளிவாக படத்தொகுப்பு செய்தவருமான பிரவீன் கே எல் தான் படத்தொகுப்பு செய்து வருகிறார். தற்போது இந்த படம் குறித்து அப்டேட் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார் கே.எல் பிரவீன்.
சமீபத்தில் நான் பார்த்த படங்களில் ஜீவி-2 மிக பிரமிப்பை ஏற்படுத்துகிறது நம்பிக்கையும் தருகிறது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார் பிரவீன். ஒரு படத்தொகுப்பாளர் படம் வெளியாவதற்கு முன்பே இவ்வளவு சிலாகித்து ஒரு பதிவை வெளியிடுகிறார் என்றால் நிச்சயம், அதற்கான நியாயத்தையும் ஜீவி-2 செய்யும் என எதிர்பார்க்கலாம்