கிட்டத்தட்ட நான்கைந்து வருட இடைவெளிக்குப் பிறகு கமல் நடித்துள்ள திரைப்படம் ஒன்று ரிலீசுக்கு தயாராகி வருவது கமல் ரசிகர்கள் மட்டுமல்லாது கமல் படத்தை ரசிக்கும் அனைத்து தரப்பினருக்கும் உற்சாகமான செய்தி தான்.
அதிலும் ஏற்கனவே கைதி, மாநகரம், மாஸ்டர் என சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனரும் கமலின் தீவிர ரசிகருமான லோகேஷ் கனகராஜ் கமலை வைத்து தற்போது விக்ரம் படத்தை இயக்கி உள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.
மேலும் விஜய்சேதுபதி, பஹத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம் என பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்திருப்பது படத்திற்கு கூடுதல் பலம். வரும் ஜூன் 3ஆம் தேதி இந்தப் படம் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகளை துவங்கி விட்டார் கமல். காரணம் அவரே இந்த படத்தின் தயாரிப்பாளரும் கூட.
அந்த வகையில் தற்போது ரயிலில் விக்ரம் படத்தின் போஸ்டர்களை வரைந்து விளம்பரமாக செய்து ஒரு பரபரப்பை உருவாக்கிவிட்டார். இன்னொரு பக்கம் விக்ரம் படத்தின் வியாபார வேலைகளையும் தீவிரமாக கவனித்து வரும் கமல் இந்தப்படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை ஒரு மிகப்பெரிய விலைக்கு கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புலி, இருமுகன், சாமி-2 ஆகிய படங்களை தயாரித்த மற்றும் ஆர்ஆர்ஆர் போன்ற பிரமாண்ட படங்களை கேரளாவில் வெளியிட்டவருமான சிபு தமீன்ஸ் இந்த படத்தின் கேரள உரிமையை கைப்பற்றி உள்ளார். ஆர்ஆர்ஆர் படத்தை போல நிச்சயமாக விக்ரம் படத்தின் மூலமும் அவர் மிகப்பெரிய அளவில் கட்டுவார் என்று உறுதியாக சொல்லலாம்.