இந்தி பேசாத மற்ற மாநிலத்தவர் அனைவரும் இந்தி கற்க வேண்டுமா வேண்டாமா என்பது குறித்து கடந்த சில நாட்களாகவே அனல் பறக்கும் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன குறிப்பாக தென்னிந்திய மாநிலங்களில் கட்டாய இந்தி திணிப்புக்கு தங்களது எதிர்ப்பை திரையுலகைச் சேர்ந்தவர்கள் வெவ்வேறு விதமாக தெரிவித்து வருகின்றனர் அந்த வகையில் நடிகர் கிச்சா சுதீப் சமீபத்தில் ஒரு விழாவில் பேசிய போது இந்தி ஒருபோதும் தேசிய மொழியாக இருந்ததில்லை என்று கூறியிருந்தார்.
இது எப்படியோ அஜய்தேவ்கன் கவனத்துக்கு செல்ல, உடனே தனது சோஷியல் மீடியா பக்கத்தில் “அப்படியானால் உங்களுடைய தாய்மொழியில் எடுக்கப்பட்ட படங்களை எதற்காக இந்தியில் டப்பிங் செய்து வெளியிடுகிறீர்கள்.. இந்தி அப்போதும் இப்போதும் எப்போதும் நம் தேசிய மொழி தான் என கூறியிருந்தார். ஆனால் அவர் இந்த பதிலை இந்தியில் பதிவிட்டிருந்தார்.
உடனே சுதீப் பதிலுக்கு, “நீங்கள் இந்தியில் அனுப்பிய செய்தி எனக்குப் புரிந்தது. அதனால் தான் நாங்கள் அனைவரும் ஹிந்தியை மதித்து, நேசித்து, கற்றுக்கொண்டோம். தப்பில்லை சார். ஆனால் ஆச்சர்யமாக எனது பதிலை நான் கன்னடத்தில் டைப் செய்தால் நிலைமை எப்படியிருக்கும்.? நாங்களும் கூட இந்தியாவைச் சேர்ந்தவர்கள் இல்லையா சார்..?” என பதில் கேள்வி எழுப்பினார்.
இப்படி இருவருக்குமான கருத்து மோதல் பரபரப்பான வாக்குவாதமாக மாறியது. ஆனால் இருவருமே பக்குவப்பட்ட நடிகர்கள் என்பதால், மேற்கொண்டு இதை நீட்டிக்க விரும்பாமல் ஒருகட்டத்தில் சமாதானக்கொடி காட்டி நிறுத்திக்கொண்டனர். அஜய் தேவ்கனும் நான் எப்போதுமே சினிமாவி பற்றியே நினைத்து கொண்டிருப்பவன் எல்லா மொழிகளுக்கும் மரியாதை கொடுப்பவன் தவறாக புரிந்துகொண்டதை உணர்த்தியதற்கு நன்றி சுதீப்..” என சாந்தமானார்.
இறுதியாக கிச்சா சுதீப், “நான் உங்களை குற்றம் சொல்லவில்லை சார்.. வார்த்தைகளில் மொழிபெயர்க்கும்போது ஏதேனும் தவறு ஏற்பட்டிருக்கலாம். உங்களை போன்ற ஒருவரிடம் இருந்து படைப்பு ரீதியாக எனக்கு இப்படி ஒரு ட்வீட் கிடைத்திருந்தால் நான் அதிகம் சந்தோஷப்பட்டிருப்பேன்.. உங்களை நேரில் சந்திக்கும்போது முறையான விளக்கம் அளிக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
அஜய் தேவ்கன் நடித்துள்ள ரன்வே 34 படம் நாளை (ஏப்-29) வெளியாகிறது.. சுதீப்பின் விக்ராந்த் ரோனா விரைவில் வெளியாக இருக்கிறது. இந்தநிலையில் இவர்களது இந்த விவாதம் படத்திற்கு இலவச விளம்பரமாக அமைந்துவிட்டது.