தமிழில் ஆர் கே செல்வமணி இயக்கிய செம்பருத்தி படத்தில் பிரசாந்துக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ரோஜா. முதல் படத்திலேயே ரசிகர்களின் மனம் கவர்ந்த கதாநாயகியாக மாறியவர் அதன்பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் அளவுக்கு குறுகிய காலத்தில் முன்னணி நடிகையாக மாறினார்.
நடிப்பும் அழகும் திறமையும் ஒன்றாக அமைந்த அவர் சினிமாவில் இருந்து ஒருகட்டத்தில் விலகி அரசியலில் நுழைந்தார் இன்னொரு பக்கம் தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனர் ஆர்.கே செல்வமணியுடன் திருமண வாழ்க்கையிலும் இணைந்தார்.
அவரது அரசியல் வாழ்க்கைக்கு பக்கபலமாக ஆர்கே செல்வமணி துணை நின்றதால் ஆந்திர அரசியலில் நுழைந்த ரோஜா பல தோல்விகளை சந்தித்து இன்று அங்கே கடும் போராட்டத்திற்கு பிறகு வெற்றிகரமான சட்டமன்ற உறுப்பினராக இரண்டு முறை தேர்வு செய்யப்பட்டு தற்போது ஆந்திர கலாச்சாரத் சுற்றுலாத் துறைக்கு அமைச்சராகியுள்ளார்.
தமிழ் திரையில் இருந்து ஒரு நடிகை இப்படி அமைச்சராகி இருப்பதை கொண்டாடும் விதமாக அவருக்கு பாராட்டு விழா நடத்த தமிழ் திரையுலகில் முடிவு செய்துள்ளார்கள். ரோஜா கதாநாயகியாக அறிமுகமான சமயத்தில் ஸ்ரீலதா என இருந்த அவருடைய பெயரை ரோஜா என மாற்றி பெயர் வைத்தவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா தான்.
அதனால் அவர் தலைமையிலேயே தென்னிந்திய திரையுலகம் சார்பாக இந்த பாராட்டு விழாவை நடத்த முடிவு செய்துள்ளார்கள். பாரதிராஜா இயக்கிய தமிழ்ச்செல்வன் என்கிற படத்திலும் ரோஜா கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.