மாயா, மான்ஸ்டர், மாநகரம் என கவனிக்கத்தக்க படங்களை கொடுத்து வெற்றிப்பாதையில் நடைபோட்டுவரும் பொட்டன்ஷியல் சினிமாஸ் நிறுவனம் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான படம் டாணாக்காரன் சூர்யா நடித்த ஜெய்பீம் படத்தில் முரட்டு போலீஸ் அதிகாரியாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த தமிழ் தான் இந்த படத்தை இயக்கி இருந்தார். விக்ரம் பிரபு கதாநாயகியை கதாநாயகனாக நடித்துள்ளார்.
இந்த படம் காவலர் பயிற்சிப் பள்ளியில், அதிகார வர்க்காத்தால் பயிற்சி மாணவர்களுக்கு நடைபெறும் அவலங்களை அப்பட்டமாக வெளிப்படுத்தி இருந்தது. ஆனால் இந்த நிலை இப்போது இல்லை கதை 80களில் நடப்பதுபோல் உருவாக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் படத்தை பார்த்த போலீஸ் உயரதிகாரிகள் படத்தை பாராட்டி உள்ளதுடன் தமிழகம் முழுவதும் உள்ள காவலர் பயிற்சிப் பள்ளிகளில் இந்த படத்தை திரையிட்டு காட்ட வேண்டும் என்கிற ஒரு உத்தரவையும் பிறப்பித்து உள்ளனர்.
அந்த வகையில் சமீபத்தில் சென்னை அசோக் நகரில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் இந்த படம் திரையிட்டு காட்டப்பட்டது. அந்த நிகழ்வில் இயக்குனர் தமிழும் கலந்து கொண்டார். இந்த படத்தை எதற்காக உருவாக்கினேனோ அந்த விஷயம் தற்போது நிறைவேறி இருப்பது ரொம்பவே மகிழ்ச்சி என்று கூறியுள்ளார் இயக்குனர் தமிழ்.
காரணம் அந்த பயிற்சி கல்லூரியில் இவருடன் படம்பார்த்த பயிற்சி காவலர்கள் நீங்கள் படத்தில் காட்டியுள்ளது போன்ற சூழல் எதுவும் இப்போது இல்லை என்றும் புகார் பெட்டி, கழிப்பறை வசதிகள் என நிறைய மாற்றங்கள் இப்போது செய்யப்பட்டுள்ளன என்றும் கூறியுள்ளனர்.
“காவல்துறை பயிற்சி பள்ளிக்கு எந்த மாதிரியான மனநிலையுடன் வரவேண்டும் என்பதை மிகவும் அருமையாகக் காட்டியிருந்தீர்கள் என்று பல்வேறு காவல்துறை அதிகாரிகள் பாராட்டியதை மறக்க முடியாது. அவர்கள் அனைவருக்கும் என் நன்றி. தமிழகம் முழுவதும் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் ‘டாணாக்காரன்’ திரையிட ஆணையிட்ட பயிற்சி ஐ.ஜி அருள் ஐபிஎஸ் அவர்களுக்கு நன்றி” என கூறியுள்ளார் இயக்குனர் தமிழ்.