மேலே சொல்லப்பட்ட தலைப்புக்கும் சொல்லப்போகும் விஷயத்திற்கும் நிச்சயம் சம்பந்தம் இருக்கிறது. விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் என தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்கள், தமிழ் சினிமாவை தாண்டி தற்போது முதன்முறையாக நேரடி தெலுங்கு படங்களில் நடிக்கும் ஒரு புதிய பாணியை ஆரம்பித்து வைத்துள்ளனர்.
ஏற்கனவே இவர்களது படங்கள் தெலுங்கில் டப்பிங் ஆகி ஓரளவிற்கு வரவேற்பு பெற்று ரசிகர் பலத்தையும் சேர்த்து வைத்திருப்பதால். இவர்கள் நேரடியாகவே தெலுங்கில் அறிமுகமாகும்போது இன்னும் அதிகப்படியான வரவேற்பு கிடைக்கும் என்கிற கண்ணோட்டத்தில் தெலுங்கு திரையுலகில் களமிறங்கியுள்ளனர்.
நிலைமை இப்படி இருக்க நடிகர் சந்தானமோ இதற்கு முற்றிலும் மாறாக முதன்முறையாக நேரடியாக கன்னட திரைப்படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்கிறார். கன்னடம், தமிழ் என இரண்டு மொழிகளில் உருவாகும் இந்த படத்தை பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த்ராஜ் என்பவர் இயக்குகிறார். இவர் கன்னடத்தில் ஹிட்டான லவ்குரு, கானா பஜனா, விசில், ஆரஞ்சு போன்ற பல படங்களை இயக்கி நட்சத்திர அந்தஸ்து பெற்ற இயக்குனராக உள்ளவர்.
இந்த படத்தில் சந்தானம் ஜோடியாக தான்யா ஹோப் என்பவர் நடிக்கிறார். இவர் ஏற்கனவே தாராள பிரபு என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தான். எப்படி தேங்காய் இல்லாமல் பூஜை நடக்காதோ அதுபோல மொட்டை ராஜேந்திரன் இல்லாமல் சந்தானம் படம் இல்லை என்பது போல இந்தப் படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் பாக்யராஜ், பிரம்மானந்தம், செந்தில், கோவை சரளா, மன்சூரலிகான் என ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் இதில் நடிக்கின்றனர்.
கதை என்று பார்த்தால் நாயகனும் நாயகியும் வெவ்வேறு விளம்பர நிறுவனங்களில் வேலை செய்கிறார்கள்.. இதனால் தொழில்முறையில் ஏற்படும் போட்டியில் எலியும் பூனையுமாக மோதிக்கொள்கிறார்கள் இந்த தொழில்முறை யுத்தத்தை முழு நீள நகைச்சுவையாக சந்தானம் பட பாணியில் உருவாக்க இருக்கிறார் இயக்குனர் பிரசாந்த் ராஜ்.
இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது பூஜையுடன் பெங்களூரில் துவங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து சென்னை பாங்காக் லண்டன் ஆகிய நகரங்களிலும் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது..