உயிர், சிந்து சமவெளி, மிருகம், கங்காரு என சர்ச்சைக்குரிய படங்களாகவே எடுத்து புகழ் பெற்றவர் இயக்குனர் சாமி. இவர் இயக்கிய மிருகம் படம் மூலமாக நடிகர் ஆதி ஹீரோவாக அறிமுகமானார். இவரது சிந்துசமவெளி படத்தில் நடித்ததன் மூலம் தான் நடிகை அமலாபால் புகழ் வெளிச்சத்திற்கு வந்தார்.
அதேசமயம் சாமியின் படங்கள் எல்லாமே இப்படி சர்ச்சைக்குரிய படங்களாகவே இருக்கிறது என்கிற வருத்தம் அவருக்கும் இருக்கத்தானே செய்திருக்கும்.. அதன் வெளிப்பாடாகத்தான் தற்போது தனது பாணியை மாற்றி ஹாலிவுட்டில் வெளியான சில்ட்ரன் ஆப் ஹெவன் என்கிற குழந்தைகள் நடித்த படத்தை தமிழில் அக்கா குருவி என்கிற பெயரில் அழகாக ரீமேக் செய்து இயக்கியுள்ளார் சாமி.

இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது இந்த விழாவில் இயக்குனர்கள் பார்த்திபன், அமீர்,, இசைஞானி இளையராஜா, நடிகர் ஆதி உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் இயக்குனர் சாமி பேசும்போது, “நான் சிந்து சமவெளி படத்தின் இசை வெளியீட்டு விழாவில், நீங்கள் இந்த படத்தை ஓட வைத்தால் நான் இது போன்ற படங்களை மட்டும் தான் இயக்குவேன். இல்லையென்றால், என்னுடைய போக்கை மாற்றிக் கொண்டு வேறு விதமான படைப்பை கொடுப்பேன் என்று கூறினேன். நீங்கள் அந்த படத்தை ஓட வைக்கவில்லை. அதனால் நான் இந்த படத்திற்கு மாறி விட்டேன்.

நீங்கள் “அக்கா குருவி” படத்தை ஓட வைக்கவில்லை என்றால் நான் மீண்டும் உயிர், மிருகம் போன்று மூன்று அல்லது நான்கு மடங்கு சர்ச்சை படத்தை தான் இயக்குவேன். அது எனக்கு கவலை இல்லை உங்களுக்கு தான் கஷ்டம். நான் நல்ல படங்கள் இயக்க வேண்டும் என்று தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், நான் என்ன மாதிரியான படத்தை இயக்க வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்யுங்கள்” என்று ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக ஒரு கோரிக்கை வைத்தார்
நல்ல படத்தை பார்க்கச் சொல்லி விடுக்கும் எச்சரிக்கை என்பதால் சந்தோஷமாக அதை ஏற்றுக்கொள்வோம் அதுமட்டுமல்ல இந்த படத்தை பார்த்த இசைஞானி இளையராஜா ஒரிஜினலை விட நீ எடுத்த படம் சிறப்பாக இருக்கிறது என்று சாமியை பாராட்டியுள்ளார். இதுவே இயக்குனர் சாமிக்கு கிடைத்த முதல் வெற்றி என்று சொல்லலாம்