கடந்த சில நாட்களுக்கு முன்பு அம்பேத்காரும் மோடியும் என்கிற பெயரில் வெளியாகிய புத்தகம் ஒன்றிற்கு இசைஞானி இளையராஜா அணிந்துரை எழுதினார்.
அதில் மோடியையும் அம்பேத்கரையும் ஒப்பிட்டு அவர் பாராட்டியிருந்தார். இதற்கு அரசியல் ரீதியாக இளையராஜாவுக்கு மிகப்பெரிய எதிர்ப்பு எழுந்தது.
ஆனால் நான் சொன்ன வார்த்தைகள் என் மனதில் இருந்து தான் சொன்னேன் அதை நான் திரும்பப் பெறமாட்டேன் என அவர் கூறியதாக அவரது சகோதரர் கங்கை அமரன் கருத்து தெரிவித்துள்ளார். தான் கூறிய விஷயத்தில் இளையராஜா உறுதியாக இருப்பதற்காக பலரும் அவரைப் பாராட்டி வருகின்றனர்.
ஆனால் சமீபத்திய நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட இயக்குனர் பா.ரஞ்சித் பேசும்போது இளையராஜா தானாகவே இதுபோன்ற கருத்துக்களை கூறியிருக்க மாட்டார் என்கிற ஒரு சந்தேகத்தை கேள்வியாக எழுப்பி உள்ளார்.
சமீபத்தில் இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பாக வானம் கலைத்திருவிழா தலித் வரலாற்று நிகழ்வாக இந்த ஏப்ரல் மாதம் முழுவதும் பல இடங்களில் நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து சென்னை அடையாறில் உள்ள டாக்டர் அம்பேத்கர் மணிமண்டபத்தில் ஓவியக் கண்காட்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பா.ரஞ்சித் பேசும்போது இசைஞானி அய்யா அவர்கள் இந்த இசைத்துறையில் செய்த சாதனைகள் நம் எல்லோருக்கும் தெரியும். இசைத்துறை யார் கையிலிருந்தது? அங்கிருந்து அதை ஜனநாயகப்படுத்தப்பட்ட இசையாக எல்லோருக்குமானதாக மாற்றியதில் இளையராஜா அய்யா செய்திருப்பது பெரும்புரட்சிதான்.
அவர் இசையின் வாயிலாக மக்களிடையே சென்று சேர்ந்திருக்கும் வலிமை மிக முக்கியமானது, இப்படிப்பட்ட வலிமையான கலைஞரை முக்கியமானவரை கைப்பற்றுவதன் மூலமாக, அவர்மூலமாக ஒரு வார்த்தையை சொல்லுவதன் மூலமாக அரசியல் சூழ்ச்சியை நிகழ்த்துவதற்கான வேலைதான் இங்கு நடக்கிறது என்று நினைக்கிறேன். இப்படிப்பட்ட சூழலில்தான் இதுபோன்ற ஓவியக்கண்காட்சிகள் நடத்துவது ரொம்ப முக்கியமானதாக நான் கருதுகிறேன் என்று கூறியுள்ளார்.