மலையாளத்தில் சூப்பர்ஹிட்டாகும் படங்களை ஆர்வமுடன் வாங்கிவந்து தமிழில் ரீமேக் செய்கிறார்கள்.. ஆனால் மலையாளத்தில் கிடைத்த வெற்றி இங்கே தமிழில் ஏன் கிடைக்க மாட்டேன் என்கிறது என்பதுதான் தெரியவில்லை. இருந்தாலும் நம்மவர்களும் விடுவதாக இல்லை.
ஆனாலும் தற்போது மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றிபெற்ற தி கிரேட் இண்டியன் கிச்சன், ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் ஆகிய படங்களை மலையாளத்தில் கிடைத்த அதே வெற்றியை இங்கேயும் பெறுவோம் என்கிற நம்பிக்கையுடன் ரீமேக் செய்து தயாரித்து வருகிறார்கள்.
அந்தவகையில் மலையாளத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் ‘விக்ருதி’ என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற படத்தின் தமிழ் பதிப்பாக ‘பயணிகள் கவனிக்கவும்’ என்கிற படம் உருவாகி உள்ளது.
விதார்த், கருணாகரன், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, மாசூம் சங்கர், சரித்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப்படத்தை இயக்குநர் எஸ்.பி. சக்திவேல் இயக்கியுள்ளார்.
சமூக வலைத்தள பக்கத்தில் பகிரப்படும் செய்தி மற்றும் புகைப்படங்கள் எம்மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை உண்மைச் சம்பவங்களின் அடிப்படையாக வைத்து இதன் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. சமூக வலைத்தளங்களை பயன்படுத்துபவர்களின் பொறுப்புணர்வு குறித்தும் இதில் விவரிக்கப்பட்டிருக்கிறது.
ஆஹா ஓடிடி தளத்தில் இந்தப்படம் வெளியாகவுள்ளது.