V4UMEDIA
HomeNewsKollywoodஜிவி-2 கதையை உருவாக்க வேண்டிய சூழல் எப்படி உருவானது ? ; இயக்குனர் விளக்கம்

ஜிவி-2 கதையை உருவாக்க வேண்டிய சூழல் எப்படி உருவானது ? ; இயக்குனர் விளக்கம்

கடந்த 2019ல் நடிகர் வெற்றி, கருணாகரன் ஆகியோர் நடிப்பில் வித்தியாசமான கதை அம்சத்துடன் வெளியாகி ரசிகர்கள், விமர்சகர்கள் மட்டுமல்லாது திரையுலக பிரபலங்கள் அனைவரிடமும் பாராட்டுக்களை பெற்ற படம் ஜீவி.. இயக்குநர் வி.ஜே.கோபிநாத் இயக்கிய இந்தப்படத்தின் இரண்டாம் பாகமாக தற்போது ஜீவி-2 உருவாகியுள்ளது

வெங்கட்பிரபு-சிம்பு கூட்டணியில் மாநாடு என்கிற மிகப்பெரிய வெற்றிப்படத்தை தயாரித்த சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன் மாநாடு படத்திற்கு பின் குறுகிய கால தயாரிப்பாக இந்த படத்தை தயாரித்துள்ளது.

ஜீவி படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷாலுக்காக ஒரு கதை எழுதி அவரிடம் ஒகேவும் வாங்கி இருந்தார் இயக்குனர் வி.ஜே.கோபிநாத்… ஆனால் கடந்த இரண்டு வருட காலத்தில் கொரோனா தாக்கம் எல்லாவற்றையும் புரட்டி போட்டு விட்டது.

விஷ்ணு விஷால் ஏற்கனவே நடித்து வந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் தாமதமாக, அதற்குள் சின்னதாக ஒரு படம் பண்ணிவிட்டு வந்து விடுங்களேன் என விஷ்ணு விஷால் கோரிக்கை வைக்க அப்படி உருவானதுதான் இந்த ஜீவி-2 படத்தின் கதை.

ஜீவி முதல் பாகத்தின் கதையையும் வசனத்தையும் கதாசிரியர் பாபு தமிழ் எழுதியிருந்தார்.. ஆனால் இந்த இரண்டாம் பாகத்திற்கான கதையை இயக்குநர் விஜே கோபிநாத்தே எழுதியுள்ளார்.

ஜீவி படத்தின் கதையே தொடர்பியல் விதியை மையப்படுத்தி தான் உருவாக்கப்பட்டிருந்தது.. எங்கோ ஏதோ ஒரு இடத்தில் ஒருத்தர் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் திரும்பவும் இன்னொரு இடத்தில் வேறு ஒருவருக்கு நடப்பதற்கு நிச்சயம் ஒரு தொடர்பு இருக்கும் அதை தெரிந்துகொண்ட நாயகன் அந்த நிகழ்வுகளை தடுத்து நிறுத்த முயற்சி செய்வார். அவரால் அது முடிந்ததா என்பது தான் முதல் பாகத்தின் கதை..

இந்த தொடர்பியல் விதி அத்துடன் முடிந்து விட்டதா, இல்லை மீண்டும் தொடருமா என ஹீரோவின் நண்பன் கேட்கும் கேள்வியில் தான் இந்த இந்த இரண்டாம் பாகத்தின் கதை தொடங்குகிறது. மீண்டும் இவர்கள் வாழ்வில் தொடர்பியல் விதி விளையாடியதா..? அதன்மூலம் என்னென்ன பிரச்சனைகள் உருவாகின,? அதையெல்லாம் நாயகன் தனது புத்திசாலித்தனத்தால் கண்டுபிடித்து அதை சரி செய்தாரா என்பதை இந்தப்படத்தில் சொல்லியிருக்கிறோம் என்கிறார் இயக்குநர் விஜே கோபிநாத்.

முதல் பாகத்தில் நடித்த வெற்றி, கருணாகரன், அஸ்வினி சந்திரசேகர், ரமா, ரோகிணி, மைம் கோபி, ‘அருவி’ திருநாவுக்கரசு என அனைவருமே இந்தப்படத்திலும் தொடர்கிறார்கள்.

அதேபோல ஒளிப்பதிவாளர் பிரவீண் குமார், இசையமைப்பாளர் கே.எஸ்.சுந்தரமூர்த்தி, படத்தொகுப்பாளர் பிரவீண் கே.எல் என அதே வெற்றி தொழில்நுட்பக் கூட்டணி தான் இந்தப்படத்திலும் இணைந்து பணியாற்றுகின்றனர்.

Most Popular

Recent Comments