நடிகர் கவினின் திரையுலக பயணத்தை பிக் பாஸுக்கு முன் பிக் பாஸுக்கு பின் என பிரிக்கலாம். அந்தவகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு வெகுஜனங்கள் நிறைய பேருக்கு அதிக அளவில் நன்கு அறிமுகமான முகம் ஆகிவிட்டார்.
இதனைத் தொடர்ந்து பட வாய்ப்புகளும் அவரைத்தேடி வருகின்றன, இந்த நிலையில் தொடர்ந்து ஒரே நேரத்தில் நான்கு படங்களை தயாரித்து வரும் அம்பேத் குமார் என்பவர் தயாரிக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் கவின்.
இந்த படத்தில் அபர்ணா தாஸ் கதாநாயகியாக நடிக்கிறார், இவர் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் இன்னொரு கதாநாயகியாக நடித்து ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான நடிகை தான்..
இந்த படத்தை கணேஷ் கே.பாபு என்பவர் இயக்கி வருகிறார். இந்த நிலையில் இந்த படத்திற்கு டாடா என்ற தலைப்பு வைக்கப்பட்டு அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
இந்த போஸ்டரில் குழந்தையை கைகளில் வைத்தபடி கவின் இருக்கும் அந்த புகைப்படமே ரசிகர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது உண்மைதான். அதேசமயம் அது என்ன டாடா என்கிற டைட்டில் வைத்துள்ளார்கள் என்றால் அதற்கு இயக்குனர் ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார் பாருங்கள், “நாம் அனைவருமே வாழ்க்கையில் தினசரி ஒரு முறையாவது இந்த பெயரை உச்சரித்து இருப்போம் படத்தின் கதைக்கும் இது பொருத்தமாக இருக்கும் என்பதால் இந்த டைட்டிலை வைத்துள்ளோம்” என்று பொத்தாம் பொதுவாக கூறியுள்ளார்.
சரிதான்.. டாடா என்று ஒருவர் தினசரி எதற்காக கூறுவார் என்றால், தான் வெளியூருக்கு அல்லது அலுவலகத்திற்கு கிளம்பும்போது தனது மனைவி குழந்தைகளுக்கு கைகாட்டிவிட்டு கிளம்புவதை இந்த வார்த்தை குறிக்கும், இன்னொன்று யாராவது ஒருவர் ஏதாவது பிசினஸ் செய்யப்போகிறேன் என்று தனது நண்பர் ஒருவரிடம் கூறினால் ஆமாம் அவர் பிசினஸ் செய்து பெரிய டாட்டா ஆகப்போகிறார் என்று தொழிலதிபர் டாட்டா உடன் ஒப்பிட்டு கிண்டலடிப்பது வழக்கம்.
அதனால் இயக்குனர் எதை மனதில்கொண்டு டைட்டில் வைத்திருப்பார் என்பது அவருக்கே வெளிச்சம். அதேசமயம் கவின் கைக்குழந்தையோடு இருப்பதாலும் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த போஸ்டரை பகிர்ந்துகொண்டு தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என வார்த்தைகளை பயன்படுத்தி இருப்பதாலும் டாடா என்றால் இந்தியில் அப்பாவை குறிக்கும் சொல், அதைத்தான் டைட்டிலாக பயன்படுத்தி இருப்பார்களோ என்று நாம் நினைத்துக் கொள்வோம்.