இதுக்கு முன்னாடி ஜாலியான செல்வராகவனை தானே பார்த்திருப்பீங்க.. இனிமேதான் சீரியஸான அவரோட இன்னொரு முகத்தை பார்க்க போறீங்க என்று சொல்லாமல் சொல்வது போல, கடந்த சில நாட்களுக்கு முன் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் முதன்முதலாக ஒரு நடிகராக இயக்குனர் செல்வராகவனின் காமெடி கலந்த கலகலப்பான நடிப்பை பார்த்தோம்.

ஆனால் அதற்கு முன்பே அவர் ஒரு கதையின் நாயகனாக நடிக்க ஒப்புக்கொண்ட சாணிக்காயிதம் திரைப்படம் வரும் மே 6-ஆம் தேதி உலகெங்கிலும் தமிழ், மலையாளம் என இரு மொழிகளில், 240 நாடுகளில் வெளியாக இருக்கிறது.

இந்தப்படத்தில் ஏற்கனவே வெளியான போஸ்டர்கள் ட்ரெய்லர் அனைத்தையும் வைத்துப் பார்க்கும்போது சீரியஸான செல்வராகவனை நிஜமாகவே நாம் பார்க்கலாம்.

அதுமட்டுமல்ல கதாநாயகியாக நடித்துள்ள கீர்த்தி சுரேஷுக்கும் இது முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரமாகவும் இருக்கும்.

இந்த படத்தின் கதை ஒரு பெண் தனக்கும் தன் குடும்பத்திற்கும் இழைக்கப்பட்ட அநீதிக்கு எப்படி பழிவாங்க புறப்படுகிறான். அதற்கு இதேபோல அநீதி இழைக்கப்பட்ட இன்னொரு மனிதனுடன் கூட்டணி சேர்ந்து எப்படி தனக்கான நியாயத்தை தேடிக் கொள்கிறாள் என்பதை மையமாக வைத்து உருவாகி உள்ளது.

அருண் மாதேஸ்வரன் இந்த படத்தை இயக்கியுள்ளார். ஏற்கனவே ராக்கி படத்தில் வேறுவிதமான ஒரு ஆக்ஷன் களத்தை கையில் எடுத்து இருந்த அவர், சாணிக்காயிதம் படமும் இன்னொரு தளத்தில் இதே போன்ற ஒரு விறுவிறுப்பான ஆக்ஷன் படம் பார்த்த உணர்வைத் தரும் என்கிறார்.
















