முதல் சுற்றில் தோற்றவர் இறுதிச்சுற்றில் ஜெயித்த கதை விளையாட்டுப் போட்டிகளில் மட்டுமல்ல, சினிமாவில் நிஜமாகவே ஒரு சிலருக்கு நடக்கும் விஷயம் தான். இயக்குனர் சுதா கொங்கரா அந்த பட்டியலை சேர்ந்தவர்தான். முதல் படமாக துரோகி என்கிற தோல்வி படத்தை கொடுத்த அவர் அதிலிருந்து துவண்டு விடாமல் மீண்டும் இறுதிச்சுற்று என்கிற படத்தின் மூலம் கவனிக்கத்தக்க வெற்றிப்பட இயக்குநராக மாறினார்.
அதை தொடர்ந்து சூர்யாவை வைத்து அவர் இயக்கிய சூரரைப்போற்று படம் அவரை கமர்சியல் இயக்குனர்களில் ஒருவராக மாற்றியது. சொல்லப்போனால் தமிழ் சினிமாவில் கடந்த பல வருடங்களில் கணக்கில் எடுத்துக் கொண்டால் கமர்சியலாக சாதித்த ஒரே பெண் இயக்குனர் சுதா கொங்கராவாகத்தான் இருக்கும்.
இந்த நிலையில் சமீபத்தில் பிரமாண்டமாக வெளியான கேஜிஎப் 2 படத்தை தயாரித்த ஹோம்பலே நிறுவனம் அடுத்ததாக தயாரிக்க உள்ள படத்தை இயக்குகிறார் சுதா கொங்கரா. இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது
இந்த படம் பற்றி தயாரிப்பு நிறுவனம் கூறும்போது, “சில உண்மை கதைகள் சொல்லப்படவேண்டும்.. எங்களின் அடுத்த படத்தை சுதா கொங்கரா இயக்குகிறார் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.. எங்களது எல்லா படங்களையும் போன்று இந்தப் படத்தின் கதையும் இந்திய அளவில் இருக்கும் என நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளனர்