கடந்த 20 வருடங்களுக்கு முன்பு அஜித் நடிப்பில் சிட்டிசன் என்கிற படம் வெளியானது. அத்திப்பட்டி என்கிற ஒரு ஊரையே வரைபடத்திலிருந்து இல்லாமல் நீக்கி சில அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் செய்யும் மோசடிகளை அம்பலப்படுத்தும் விதமாக அந்த படத்தின் கதை உருவாகியிருந்தது
இந்த நிலையில் இயக்குனர் ராஜமோகன் டைரக்ஷனில் உருவாகி உள்ள அட்ரஸ் திரைப்படமும் இதேபோன்று ஒரு கதைக்களத்தில் தான் உருவாகி உள்ளது இவர் ஏற்கனவே குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும், வானவராயன் வல்லவராயன் ஆகிய படங்களை இயக்கியவர்.

இந்த படத்தில் அதர்வா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இசக்கி பரத், புதுமுகம் பிரியா ஆகியோர் கதாநாயகன் நாயகியாக நடித்து உள்ளனர். முக்கிய வேடங்களில் இயக்குனர்கள் ஏ.வெங்கடேஷ், தம்பி ராமையா ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்திய நாட்டில் அட்ரஸ் இல்லாத ஒரு ஊர், அந்த ஊரில் வாழும் மக்களின் வலியை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது.
இந்த படம் குறித்து இயக்குனர் ராஜமோகன் கூறும்போது, “நமது நாட்டு பிரதமரில் இருந்து முதலமைச்சர் வரை, நியூஸ் சேனலில் கிராமங்கள் கணினி மயம் ஆகிறது என கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் கூறுவது திருநெல்வேலி வரை உள்ள கிராமங்கள் மட்டுமே. அதைத்தாண்டி இருப்பவை கிராமங்களாக இவர்களுக்குத் தெரியவில்லை.

கேரளாவுக்கும் தமிழ் நாட்டிற்கும் இடையில் ஒரு கிராமம் உள்ளது. அந்த கிராமத்திற்கு 2015ல் தான் அட்ரஸ் கிடைத்தது. இப்படி ஒரு உண்மை சம்பவத்தை கற்பனை கலந்து இந்த படத்தில் கூறியுள்ளேன். இந்த நாட்டில் அட்ரஸ் இல்லாத ஒரு ஊர், 1956ல் மொழிவாரி மாநிலமாக இருக்கிறபோது தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் நடுவில் சிக்கிக் கொண்டது.

தனது அட்ரஸ தொலைத்த அந்த கிராமத்திற்கு அட்ரஸ் கிடைத்ததா இல்லையா என்பதே இந்த படத்தின் கதை. உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாகி உள்ளதாகவும் இயக்குனர் ராஜமோகன் கூறினார்.
இந்த படத்தில் அதர்வா முரளி கதாநாயகன் என்று இல்லாமல் நட்புக்காக காளி என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.