அண்ணாத்த படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்க உள்ளார் என்றும் அந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்றும் அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் என்பதும் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது.
இந்த நிலையில் சமீபத்தில் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. பெரும்பாலானோர் விஜய்யின் இந்த படத்திற்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்றும் நெல்சன் சரியாக படத்தை இயக்கவில்லை என்பது போன்றும் பலவிதமான கருத்துக்களை சோசியல் மீடியாவில் கூறிவருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து இன்னும் சிலர் நெல்சனுக்கு தற்போது பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்றும் அதனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தை இயக்குவதில் இருந்து ஏதாவது மாற்று அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கூட வதந்திகளைப் பரப்ப ஆரம்பித்தனர். இந்த நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், நெல்சன் இருவருமே வாய்மொழியாகவோ அறிக்கையாகவோ இல்லாமல் இந்த வதந்திக்கும் சர்ச்சைகளுக்கு.ம் பதிலடி கொடுத்து முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
அதாவது நெல்சன் தனது டுவிட்டர் புரபைலில் இதுநாள்வரை கோலமாவு கோகிலா டாக்டர் பீஸ்ட் என தனது மூன்று படங்களின் பெயர்களை மட்டுமே இணைத்திருந்தார். நேற்று மாலை அவர் அதில் தலைவர் 169 என்கிற படத்தையும் இணைத்து அப்டேட் செய்தார். இந்த தகவல் வெளியான கொஞ்ச நேரத்திலேயே சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படத்தை நெல்சன் இயக்குவது உறுதி என்கிற தகவல் பரவ ஆரம்பித்தது.
அதே போல சற்று நேரம் கழித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் தன்னுடைய ட்விட்டர் புரொஃபைல் படமாக ஏற்கனவே வைத்திருந்த தர்பார் படத்தை மாற்றிவிட்டு அதில் தான் நடிக்க உள்ள புதிய படத்தின் அறிவிப்பு வெளியானபோது வெளியிடப்பட்ட புகைப்படத்தை மாற்றி வைத்துள்ளார்.
இதன்மூலம் நெல்சன் இயக்கத்தில் தான் நடிப்பதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.