தமிழில் நேரம் படம் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமாகி முதல் படத்திலேயே அவர்களின் மனம் கவர்ந்த நாயகியாக மாறியவர் நடிகை நஸ்ரியா. அதன்பிறகு ராஜா ராணி, நையாண்டி உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர், தனது தாய்மொழியான மலையாளத்திலும் கூட வெகு சில படங்களில் மட்டுமே நடித்தார்.
நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்துகொண்டு நடிப்பை விட்டு சில காலம் ஒதுங்கி இருந்த நஸ்ரியா, தற்போது முதன்முதலாக தெலுங்கு திரையுலகில் நானிக்கு ஜோடியாக அன்டே சுந்தரானிக்கி என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் தமிழில் அடடே சுந்தரா என்கிற பெயரில் வெளியாக இருக்கிறது.
ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்த ஒரு இளைஞனுக்கும் ஒரு கிறிஸ்துவ பெண்ணுக்கும் ஏற்படும் நட்பும் அதைத்தொடர்ந்து ஏற்படும் குழப்பங்களும் தான் படத்தின் கதை. இந்த படத்தை விவேக் ஆத்ரேயா என்பவர் இயக்கியுள்ளார்.
இந்த படம் தவிர கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் நஸ்ரியா தனது கணவருடன் இணைந்து நடித்த ட்ரான்ஸ் என்கிற திரைப்படம் நிலை மறந்தவன் என்கிற பெயரில் தமிழில் விரைவில் வெளியாக இருக்கிறது. அந்த வகையில் எட்டு வருடங்களுக்கு பிறகு தமிழ் ரசிகர்களை தேடி வருகிறார் நஸ்ரியா