உலக கின்னஸ் சாதனை படைக்கும் விதமாக 3.6.9 என்கிற படம் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது படப்பிடிப்பு துவங்கி எந்த இடத்திலும் கட் சொல்லாமல் தொடர்ந்து 81 நிமிடங்களில் படமாக்கப்பட்டுள்ளது இந்தப்படம். இதற்காக 24 கேமராக்களில் ஒளிப்பதிவு செய்ய, 450 தொழில் நுட்ப கலைஞர்கள் பங்கேற்க, 75 – க்குமேற்பட்ட நடிகர்களின் நடிப்பில் உருவாகியுள்ளது.

சிவா மாதவ் இயக்கியுள்ள இந்தப்படத்தில் பாக்யராஜ் கதையின் நாயகனாக நடித்துள்ளார். முதன்முறையாக இந்தப்படத்தில் பாதிரியார் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பாக்யராஜ். இந்தப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா தற்போது நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் ஆரி பேசும்போது, “இப்போது சினிமாவில் ஒரு பஞ்சாயத்து போய் கொண்டு இருக்கிறது. பீஸ்ட் Vs கேஜிஎஃப். முதலில் இதை ஓப்பிடுவதே தவறு. கேஜிஎஃப் ஒரு பான் இந்திய படம், ஆனால் பீஸ்ட் ஒரு மொழிக்கான படம், அதற்காக பீஸ்டை தாழ்த்தி பேசுவது மிகவும் தவறு.

தமிழ் சினிமா செய்யாத சாதனைகளே இல்லை. இங்கு தான் ஒத்த செருப்பு போன்ற படம் வந்தது. உலகின் 100 சிறந்த படங்களில் பட்டியலிடப்பட்ட நாயகன் படமும் இங்கு தான் உருவானது. தமிழ் படங்களை தாழ்த்தி பேசக்கூடாது. இதோ இந்தப்படமும் 81 நிமிடத்தில் எடுத்து சாதனை படைத்துள்ளனர்.

இப்படிப்பட்ட படங்களை நாம் கொண்டாட வேண்டும். முன்னெடுத்து செல்ல வேண்டும். இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள். பாக்யராஜ் சார் 21 வருடங்கள் கழித்து நாயகன் என்கிறார்கள். ஆனால் அவர் எப்போதும் ஹீரோ தான். அவரளவு சாதனைகள் எவரும் செய்ய முடியாது. சின்ன வீடு எனும் அடல்ட் படத்தை கூட குடும்பத்தோடு பார்க்கும்படி எடுப்பவர். ஒரு அடல்ட் படம் எப்படி எடுக்க வேண்டும் என அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும். அவர் மாதிரி அடல்ட் படம் எடுத்தால் நான் நடிக்க தயார்.” என கூறினார்.