எதார்த்தமான கிராமத்து கதைக்களங்களில் வெள்ளந்தி மனிதர்களின் வாழ்க்கையை மனதுக்கு நெருக்கமான படங்களாக இயக்கி வருபவர் இயக்குனர் சீனு ராமசாமி. தர்மதுரை படத்திற்கு பிறகு மீண்டும் விஜய்சேதுபதியை வைத்து இவர் இயக்கியுள்ள மாமனிதன் படம் தற்போது ரிலீஸுக்கு தயாராக உள்ளது
இந்த படத்தில் நடிகை காயத்திரி கதாநாயகியாக நடிக்க, முக்கிய வேடத்தில் மலையாள நடிகர் மணிகண்டன் ஆச்சாரி நடித்துள்ளார். இந்த படத்தில் ஆட்டோ டிரைவர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் விஜய்சேதுபதி.
இந்த படத்தின் இன்னொரு சிறப்பம்சமாக இளையராஜாவும் யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளனர். இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா புதுச்சேரியில் நடைபெற்றது.
இந்த விழாவில் இயக்குனர் சீனுராமசாமி பேசும்போது, “யுவன் ஷங்கர் ராஜாவுக்கு இந்தப்படம் குழந்தை போல. யுவன், விஜய்சேதுபதி இல்லாமல் இந்தப்படம் நடந்திருக்காது. முழு ஈடுபாட்டுடன் இப்படத்தை தொடங்கினேன். இளையராஜாவுக்கு அர்ப்பணிக்கும் விதமாக இப்படம் இளையராஜா பிறந்த ஊரான பண்ணைப்புரத்தில் நிகழும் விதமாக கதை அமைக்கப்பட்டுள்ளது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படத்தைப் பார்த்துவிட்டு மிகவும் பாராட்டினார்” என்றார்.
விஜய்சேதுபதி பேசும்போது, “யுவன் ஷங்கர் ராஜா மற்றும் இளையராஜாவுடன் ஒரே படத்தில் பணியாற்றும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைத்திருக்காது.. நான் இளையராஜாவின் தீவிர ரசிகன், அவருடைய இசையில் இருந்து கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன. இயக்குநர் சீனுராமசாமி மனிதாபிமானத்தை மையப்படுத்தி படம் எடுக்க கூடியவர்.. இந்தப்படத்தின் ஒரு பகுதியாக இருந்த அனைவருக்கும் நான் நன்றி கூறுகிறேன்,” என்றார்.
படத்தின் தயாரிப்பாளரான யுவன் சங்கர் ராஜா பேசும்போது, “நானும் சீனுராமசாமியும் ஒன்றாக பலமுறை பணியாற்றியுள்ளோம். இந்தப்படத்திற்காக நான் விஜய்சேதுபதியை அணுகியபோது அவர் கால்ஷீட் இல்லை என்று கூறினார். நானும் என் அப்பாவும் படத்திற்கு ஒன்றாக இசையமைப்போம் என்று சொல்லி அவரை சம்மதிக்க வைத்தேன்.
இந்தப்படத்தில் என் தந்தையுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறேன், படத்தை நான் தயாரிப்பதால்தான் இது சாத்தியமானது. படம் வெளியாவதில் பல சிக்கல்களும் சந்தேகங்களும் இருந்தன. ஆர்.கே.சுரேஷ் படத்தை பார்த்து மிகவும் பிடித்ததாக கூறினார் என சீனு ராமசாமி என்னிடம் தெரிவித்தார். குழப்பமான ஒரு சூழ்நிலையில் இருந்த போது, இது ஒரு நேர்மறையான உணர்வைக் கொடுத்தது”. என்று கூறினார்
இந்தப்படத்தை வெளியிடும் ஆர்.கே.சுரேஷ் பேசும்போது, “இயக்குநர் பாலுமகேந்திராவுக்கு பிறகு மனித உணர்வுகளை படம்பிடிக்கும் சமகால இயக்குநர்களில் சீனு ராமசாமி முக்கியமானவர்.. எங்கள் இருவரின் நட்பு தான் ‘தர்மதுரை’ வெற்றிக்கு வழிவகுத்தது. மக்கள் மனதில் ரஜினிகாந்த் மட்டுமே அடைந்துள்ள இடத்தை விஜய்சேதுபதி கூடிய விரைவில் பிடிப்பார். சீனுராமசாமி எப்போதும் விஜய்சேதுபதியிடம் இருந்து சிறந்ததையே பெறுவார். இந்த திரைப்படம் வெற்றிபெற வாழ்த்துகிறேன்”, என்று அவர் மேலும் கூறினார்.
இந்தப் படத்தின் போட்டி உரிமையை அல்லு அரவிந்தின் ஆஹா ஓடிடி தளம் கைப்பற்றியுள்ளது.