இந்த பதினைந்து வருடங்களில் மிகக்குறைவான படங்களை இயக்கினாலும் தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக, ரசிகர்கள் விரும்பும் இயக்குனராக சாதனை செய்தவர் இயக்குனர் வெற்றிமாறன். அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்களுக்கும் தமிழ் சினிமாவில் சிவப்பு கம்பள வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்த நிலையில் வெற்றிமாறன் ஒரு புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளார் அதாவது சமூகத்தில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவ, மாணவிகளை ஊடகத்துறையில் மிகச்சிறந்த ஆளுமைகளாக உருவாக்க நாம் அறக்கட்டளையின் சார்பாக திரை – பண்பாடு ஆய்வகத்தை துவக்கியுள்ளார்
உண்மையிலேயே சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையில் விளிம்புநிலை மனிதர்களாக , முதல் தலைமுறை பட்டாதாரிகளாக இருக்கிறார்களா ? தனது வலியை, தனது பண்பாட்டை ஊடகங்களில் பதிவு செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் இருக்கிறார்களா என்று ஆய்வு செய்து அவர்கள் குடும்பத்தின் ஒப்புதலோடு மாணவ, மாணவிகளுக்கு கல்வி, உணவு, தங்குமிடம் போன்ற வசதிகளை கட்டணமில்லாமல் ஏற்பாடு செய்து கொடுக்க இருக்கிறார்.
எப்போதும் வெற்றிமாறன் முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு தோள்கொடுத்து உறுதுணையாக இருக்கும் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு இந்த நிகழ்ச்சிகள் துவக்க விழாவில் கலந்து கொண்டு தனது பங்களிப்பாக ஒரு கோடி ரூபாயை வழங்கியுள்ளார். மேலும் இந்த ஆய்வகத்தில் பங்குபெற்று திறமையுடன் வெளியேறி வருபவர்களில் வெற்றிமாறன் யாரை கைகாட்டி வாய்ப்பு கொடுக்க சொன்னாலும் அவருக்கு தனது வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தில் படம் இயக்க வாய்ப்பு தருவதாகவும் உறுதியளித்துள்ளார் கலைப்புலி தாணு.