மலையாள திரையுலகில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியான படம் டிரான்ஸ். பஹத் பாசில், அவரது மனைவி நஸ்ரியா இருவரும் நடித்திருந்த இந்த படத்தை பிரபல இயக்குனர் அன்வர் ரஷீத் இயக்கியிருந்தார். இயக்குனர் கௌதம் மேனன் இந்தப் படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.
மத நம்பிக்கையை வைத்து, மூடநம்பிக்கைகளின் மேல் வியாபாரம் நடத்தும் மத வியாபாரிகளின் முகத்திரையை தோலுரிக்கும் விதமாக வெளியாகியிருந்த இந்த படத்திற்கு கேரளாவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அதேசமயம் இந்த படத்தை நேரடியாக தற்போது தமிழிலும் மொழிமாற்றம் செய்து வெளியிடுகின்றனர்.
இந்த படத்திற்கான ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பொதுவாக மதமாற்றத்திற்கு எதிராக குரல் கொடுத்து வரும் பாஜக தலைவரான ஹெச்.ராஜா, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஹெச்.ராஜா பேசும்போது, தமிழகத்தின் மக்களை ஒரு நிலைக்கு கொண்டு வருவதற்காக எடுக்கப்பட்டுள்ள படம் என்று இந்த நிலை மறந்தவன் படத்தை சொல்லலாம். விவேகானந்தர் கூறியது போல மூடநம்பிக்கைக்கு எதிராக தொடர்ந்து யுத்தம் நடத்திக் கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. இந்த சோப்பை விட அந்த சோப் உயர்ந்தது என சோப் விளம்பரம் போல மதத்தை விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அதிகார வர்க்கத்தில் இருப்பவர்களை விலைக்கு வாங்கி மதப்பிரச்சாரம் என்கிற பெயரில் தேசிய ஒருமைப்பாட்டிற்கு ஊறு விளைவிக்க முயற்சித்து வருகிறார்கள்.. அந்தவகையில் இந்த படம் உண்மையை, நாட்டில் நடப்பதை அப்படியே சொல்கின்ற ஒரு படம்தான். தமிழக மக்களுக்கு பாடமாக இந்த படம் வந்துள்ளது..
நாங்கள் கிறிஸ்துவையும் கிறிஸ்தவரையும் ஒருபோதும் எதிர்க்கவில்லை அவர்கள் அதை வியாபாரமாக்கும்போது, மூடநம்பிக்கைகளை திணிக்கும்போது அதற்கெதிராக குரல் கொடுக்கிறோம். இதேபோன்று அப்போதே பராசக்தி படத்தில் இந்து மதத்தின் பெயரால் நடக்கும் மூடப்பழக்க வழக்கங்களை சாடியபோது இந்த கேள்வி அப்போது எழவில்லையே..
அந்தவகையில் மத வியாபாரிகளை வெளிப்படுத்தும் படம் தான். இந்த நிலை மறந்தவன். அதனால் இந்த படத்திற்கு எதிர்ப்பு என்பது தேவையில்லாத ஒன்று.. தன்நிலை மறந்தவன் தான் இந்தப் படத்தை எதிர்ப்பான்” என்றார்