கருணாஸ் நடித்த அம்பாசமுத்திரம் அம்பானி என்ற படத்தை இயக்கியவர் ராம்நாத் பழனிகுமார். அதன்பிறகு ஜீவா நயன்தாரா நடித்த திருநாள் என்கிற படத்தை இயக்கியவர், தற்போது ஆதார் என்கிற படத்தை இயக்கியுள்ளார். இதில் கருணாஸ், அருண்பாண்டியன், இனியா, ரித்விகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா தற்போது நடைபெற்றது

இதில் இயக்குனர்கள் பாரதிராஜா, அமீர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இயக்குனர் இமயம் பாரதிராஜா பேசும்போது, சமீபகாலமாக தமிழ் படங்களை விட தெலுங்கு படங்களில் பிரம்மாண்டமாக செலவழித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்கள். அந்தவகையில் நீங்கள் என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளுங்கள், தற்போதைய சூழலில் தமிழ் மலையாள சினிமாக்களை விட தெலுங்கு சினிமா ஒருபடி உயர்வாகவே இருக்கிறது” என்றார்.

இந்தக் கருத்தை அவர் வேதனையுடன் தான் கூறியிருக்க வேண்டும். அப்படி அவர் கூறியதற்கு காரணம் இதேவிழாவில் கலந்து கொண்ட நடிகர் அருண்பாண்டியன் அவருக்கு முன்னதாக பேசும்போது, “தமிழ் சினிமாவில் நாங்கள் நடித்த காலகட்டம்தான் பொற்காலம். காரணம் அப்போது படத் தயாரிப்புக்கு 90 சதவீதமும் சம்பளமாக 10 சதவீதமும் செலவு இருந்தது.

ஆனால் இப்போது நடிகர்களின் சம்பளத்திற்கே 90 சதவீதம் சரியாக போய்விடுகிறது. மீதி 10 சதவீதத்தில் தான் படத்தையே தயாரிக்கிறார்கள்.. அந்த வகையில் தமிழ் சினிமா தரத்தில் தற்போது பின்தங்கியே இருக்கிறது” என்று தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார்.

இந்த விழாவில் மற்றவர்கள் பேசியதிலிருந்து பல சுவாரசியமான விஷயங்கள் நமக்கு கிடைத்தன. கருணாஸ் நடித்த அம்பாசமுத்திரம் அம்பானி படத்தில் முதலில் கதாநாயகியாக நடிக்க சிம்ரனை ஒப்பந்தம் செய்வததாகத்தான் முடிவு செய்து இருந்தார்களாம். ஆனால் கருணாஸ் தான் சிம்ரன் அந்த கதாபாத்திரத்தில் நடித்தால் அந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் எடுபடாது என கூறிவிட்டதாக ஒரு புதிய தகவலை தெரிவித்தார்.
அதேபோல இயக்குனர் அமீரின் ராம் படத்திலேயே முதலில் நடிப்பதற்கு கருணாஸ் தான் ஒப்பந்தமானார் என்றும் பின்னர் சில காரணங்களால் அதில் நடிக்க முடியாமல் போய்விட்டது என்றும் கூறினார் கருணாஸ்.

இந்த படத்தின் இயக்குனர் ராம்நாத் பழனிகுமார் பேசும்போது இந்த படத்தின் கதையை தயார் செய்து வைத்து பல நிறுவனங்களிலும் கூறியபோது நிறைய பேர் தயாரிக்க முன்வந்தாலும் பல பேர் ஏதோ ஒரு விதத்தில் முட்டுக்கட்டை போட்டு இந்த படத்திற்கு தடையாக நின்றனர். ஒருவேளை நானே இந்த படத்தின் தயாரிப்பாளராக மாறி இதை எடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் எத்தனை நாட்கள் தள்ளிப் போனதோ என்று நினைக்கிறேன் என கூறினார்.